சமூகப் பணி, பொதுச் சுகாதாரம், விளையாட்டுத்துறை, கலைகள் போன்றவற்றில் முன்னோடிகளாகத் திகழும் பெண்களின் பெயர்கள் அனைத்துலக மகளிர் தினத்தன்று சிங்கப்பூரின் புகழ்பெற்ற மாதர் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன.
அந்த வரிசையில் சிங்கப்பூரில் பரத நாட்டியக் கலையில் முன்னோடியாக திகழும் திருமதி சாந்தா பாஸ்கரின் பெயரும் அப்பட்டியலில் இன்று சேர்க்கப்பட்டுள்ளது.
திருமதி சாந்தா பாஸ்கருக்கு இஸ்தானாவில் இன்று அதிபர் ஹலிமா யாக்கோப் புகழ்பெற்ற மாதருக்கான கோப்பையை வழங்கினார்.
திருமதி சாந்தா பாஸ்கரின் பெயருடன் மேலும் ஆறு பெண்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த ஆறு பேரும் இறந்துவிட்டதால் அவர்கள் சார்பாக அவர்களின் அன்புக்குரியவர்கள் கோப்பையைப் பெற்றுக்கொண்டனர்.
பொதுச் சுகாதாரத்துறை முன்னோடி இடா மேபல் மரே சிம்மண்ஸ், விளையாட்டு வீராங்கனையும் கல்வியாளருமான மே நோலின் ஓலர்ஸ், ஓவியக் கலை முன்னோடி குவான் ஷான் மெய், சமூகப் பணியாளரும் கல்வியாளருமான மிர்னா பிராகா-பிளேக், விளையாட்டுத்துறை நிர்வாகியும் வழக்கறிஞருமான அனெபல் பெனிஃபேதர் ஆகியோரின் பெயர்கள் புகழ்பெற்ற மாதர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

