இணையத்தில் பெண்களைப் பாதுகாக்க புதிய திட்டம்

இணையத்தில் பெண்களைப் பாதுகாக்க புதிய திட்டம்

2 mins read
8190907b-d331-4a9b-930b-a511f8c4c4a4
கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்றவர்களுடன் உரையாடும் தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் (வலமிருந்து இரண்டாவது). படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

இணையத்தில் பெண்களைப் பாதுகாக்க கூடுதலான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் ஆபாசப் புகைப்படங்களைப் பெறுவதோ வரவேற்கத்தகாத நடவடிக்கைகளை எதிர்கொள்வதோ வழக்கமான ஒன்று எனப் பெண்கள் நினைக்கத் தொடங்கிவிடக்கூடும் என்று தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் எச்சரித்துள்ளார்.

இந்த விவகாரத்தை எதிர்கொள்ள 'ஒன்றுபட்ட சிங்கப்பூர் செயற்கூட்டணி' எனும் புதிய திட்டம் ஒன்றை நேற்று அவர் அறிவித்தார்.

இணையத்தில் பெயர் தெரியப்படாத நிலை உள்ளிட்ட அம்சங்கள், பெண்களின் பாதுகாப்பை நிலைநாட்டும் சமுதாய கோட்பாடுகளுக்குப் பங்கம் விளைவிப்பதாக திருமதி சிம் சொன்னார்.

இணையத்தில் பெண்களைப் பாதுகாக்க திருமதி சிம் சில யோசனைகளை வழங்கினார்.

இணையக் களஞ்சியம் ஒன்றை அமைப்பது அவற்றில் ஒன்று. பாதிக்கப்பட்ட பெண்கள் அதில் உதவி நாடுவதுடன் தொழில்நுட்ப நிறுவனங்களின் கொள்கைகளைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.

மேலும், இணையத்தில் தாங்கள் காணும் முறைகேடான நடவடிக்கைகளை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தவும் மக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

இணையத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் சிலவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டும் நோக்கில் தேசிய கலந்துரையாடல் ஒன்றை திருமதி சிம் வழிநடத்துகிறார்.

இணையத்தில் பெண்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளை ஆராயும் ஒன்றுபட்ட சிங்கப்பூர் செயற்கூட்டணி இவ்வாண்டு பிற்பகுதியில் அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைக்கப்படும்.

இதன் தொடர்பில் கடந்த மாதமும் நேற்றும் நடைபெற்ற முதல் இரு கலந்துரையாடல்களில் 60க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் பங்கேற்றனர். இதுகுறித்த கூடுதல் கலந்துரையாடல்கள் பின்னர் நடத்தப்படும்.

நேற்றைய கலந்துரையாடலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமதி சிம், இணையத்தில் பெண்கள் எதிர்நோக்கும் ஆபத்துகள் குறித்து தொடர்பு, தகவல் அமைச்சு கண்காணித்து வருவதாகச் சொன்னார்.

தொழில்நுட்ப நிறுவனங்கள், பெற்றோர், மாணவர், மாதர் குழுக்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் அமைச்சு தொடர்பில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

"இந்தக் கலந்துரையாடல்களில் பங்கேற்க ஆண்களையும் நாங்கள் அழைத்தோம். இந்த விவகாரம் குறித்து அவர்களும் தங்களது கவலையை வெளிப்படுத்தினர். பெண்களுக்குத் தங்களால் எந்தெந்த விதங்களில் ஆதரவு அளிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொள்ள ஆண் பங்கேற்பாளர்கள் விரும்பினர்," என்று திருமதி சிம் சொன்னார்.

இந்த விவகாரம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பங்கேற்பாளர்கள் கோரியதாக திருமதி சிம் கூறினார்.