14 ஆண்டுகளாக தமது மூன்று மகள்களைப் பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்திய 55 வயது ஆடவருக்கு இன்று 33 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்த அந்த ஆடவர் தமது ஒவ்வொரு மகளும் 11 வயதை எட்டியதும் அவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த தொடங்தினார்.
பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தைக் காக்க ஆடவரின் பெயரை வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மூத்த மகளின் வயது தற்போது 26. ஆக இளைய மகளுக்குத் தற்போது 13 வயது.
பல ஆண்டுகளாக பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்தப்பட்டதால் மூத்த மகளும் இரண்டாவது மகளும் கடுமையான மனவுளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆக இளைய மகளுக்கு மிகக் கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அவருக்கு உளவியல் சிகிச்சை தேவைப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தந்தைக்குப் பயந்து மூத்த மகளும் இரண்டாவது மகளும் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை யாரிடமும் சொல்லவில்லை.
இந்நிலையில், 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி இரவு தம்முடன் பாலியல் உறவு கொள்ள அந்த ஆடவர் தமது ஆக இளைய மகளை அழைத்தார்.
ஆனால் அந்தச் சிறுமி மறுத்து அழத் தொடங்கினார். நினைத்தது நடக்காததால் அந்த ஆடவர் கோபமடைந்தார்.
மறுநாள் இதுகுறித்து ஆடவரின் ஆக இளைய மகள் தமது நண்பர்களிடம் மனந்திறந்தார். இதைப் பற்றி ஆசிரியரிடம் கூறும்படி நண்பர்கள் அறிவுறுத்தினர். தகவல் அறிந்த ஆசிரியர் பாதிக்கப்பட்ட சிறுமியை அழைத்துச் சென்று போலிசில் புகார் செய்தார்.
விசாரணையின்போது சிறுமியின் இரண்டு சகோதரிகளுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களும் வெளிச்சத்துக்கு வந்தன.
குற்றம் புரிந்த ஆடவர் 50 வயதைக் கடந்துவிட்டதால் அவருக்குப் பிரம்படி விதிக்க முடியாது.

