அடுத்த ஆண்டு இறுதிக்குள் 500 சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மின்னிலக்கமயமாவதன்மூலம் தங்களது தொழிலை உருமாற்றிக்கொள்ள புதியதொரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
'எஸ்எம்இ மின்னிலக்க உருமாற்றத் திட்டம்' எனும் அத்திட்டத்தின்கீழ், என்டியுசியின் 'யு எஸ்எம்இ' கட்டமைப்பு உதவி தேவைப்படும் நிறுவனங்களை அடையாளம் காணும்.
அந்நிறுவனங்களுக்கான ஒரு மின்னிலக்கமயத் திட்டத்தை உருவாக்க யுஓபி வங்கியின் புத்தாக்க ஊக்குவிப்பு அமைப்பான 'தி ஃபின்லேப்' உதவும்.
இதனிடையே, நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியும் என்டியுசியின் பயிற்சிப் பிரிவான 'லேனிங்ஹப்பும்' பணிமுறைத் தானியக்கம், மின்னிலக்கச் சந்தைப்படுத்தல், மின்னிலக்கத் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பு போன்ற ஐந்து அம்சங்களில் பயிற்சி வழங்கும்.
புதிய தேர்ச்சிகளைப் பணி இடங்களில் நடைமுறைப்படுத்தும் வழிகள் குறித்தும் அத்திட்டம் நிறுவனங்களுக்கு வழிகாட்டும்.
கடந்த ஆண்டில் முன்னோட்டமாக இடம்பெற்ற ஐந்து மாதகாலப் பயிற்சித் திட்டத்தில் 40 நிறுவனங்கள் பங்கேற்று பலனடைந்தன. அவற்றுள் பெரும்பாலானவை சிறிய, நடுத்தர நிறுவனங்கள்.
நேற்றைய 'எஸ்எம்இ மின்னிலக்க உருமாற்றத் திட்ட' அறிமுக நிகழ்ச்சியின்போது, இரு புரிந்துணர்வுக் குறிப்புகள் கையெழுத்தாகின.
புதிய சாத்தியங்களுக்கு ஏற்ப மாறிக்கொள்ள விரும்பும் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு கொவிட்-19 பரவல் புதிய வாய்ப்பு களைக் கொண்டு வருவதாக என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங் குறிப்பிட்டார்.
"சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மின்னிலக்கமயமாகி, இப்போதுள்ள சிறந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, உற்பத்தித்திறனையும் மேம்படுத்துவதன்மூலம் அவை சிங்கப்பூரில் நீண்டகாலம் நிலைத்திருக்கக்கூடிய தொழில்களை உருவாக்க முடியும். இவை அனைத்தையும் கொண்டு, இந்த மின்னிலக்க உலகில் ஊழியர்களுக்கு நல்ல ஊதியம், நல்வாழ்வு, நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்க என்டியுசி ஆர்வம் கொண்டுள்ளது," என்று திரு இங் கூறினார்.

