வகுப்பு நேரத்திற்குப் பிந்திய ஆதரவுத் திட்டம் தந்துள்ள பலன் குறித்து அமைச்சர்
வகுப்பு நேரத்திற்குப் பின் மாணவர்களுக்கு ஆதரவு வழங்கும் திட்டம் ஒன்று நல்ல பலன்களைத் தந்திருப்பதாக கல்வி இரண்டாம் அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் ஆற்றலை வெளிக்கொணரும் 'கியர்-அப்' திட்டத்தில் சேர்ந்துள்ள மாணவர்களிடையே தன்னம்பிக்கை மேம்பட்டு உள்ளதையும் வகுப்புகளைப் புறக்கணிக்காமல் அவர்கள் பள்ளிக்குத் தவறாமல் வருவதையும் அவர் சுட்டினார். 'கியர்-அப்' திட்டத்தின் நடவடிக்கைகளைப் பார்வையிட உட்லண்ட்ஸ் பகுதியில் உள்ள அட்மிரல்டி உயர்நிலைப் பள்ளிக்கு நேற்று வருகையளித்த டாக்டர் மாலிக்கி, செய்தியாளர்களிடம் பேசியபோது இதனைக் கூறினார்.
"சரியான உள்கட்டமைப்பு வசதிகள், சரியான ஆதரவு, சரியான திட்டங்களுடன் கூடுதலான பள்ளிகளுக்கு கியர்-அப் திட்டத்தை விரிவுபடுத்த நாங்கள் விரும்புகிறோம்," என்றார் அவர்.
இத்திட்டத்தின் மூலம் இதுநாள் வரை 6,700க்கும் அதிகமான உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பலன் அடைந்துள்ளனர். கூடுதலான பள்ளிகளும் இப்போது 'கியர்-அப்' திட்டத்தை வழங்குகின்றன. 2019ல் 60ஆக இருந்த பள்ளிகளின் எண்ணிக்கை தற்போது ஏறக்குறைய 120ஆக அதிகரித்துள்ளது.
பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களைக் கைதூக்கிவிட கல்வி அமைச்சு மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இத்திட்டம் அமைகிறது.
"தங்களது பின்னணி காரணமாக பள்ளியில் சிறப்பாக செய்ய மாணவர்களுக்குத் தடங்கல் ஏற்படுவதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. வெறும் ஏட்டுக்கல்வி மட்டுமல்ல, மாணவர்களது நலன், அவர்களுக்கு வழங்கப்படும் ஆதரவு, அவர்கள் தாங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, அவர்களது பலம் உள்ளிட்ட பல அம்சங்களையும் நாங்கள் கருத்தில் கொள்கிறோம். சமுதாய முன்னேற்றம் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய நாங்கள் விரும்புகிறோம்," என்று டாக்டர் மாலிக்கி விவரித்தார்.

