பெண்டமியர் சாலையில் உள்ள காப்பிக்கடை அருகே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தந்தை, மகன் ஆகிய இருவரைத் தாக்கிய 73 வயது கியோ கிம் ஹோக்கிற்கு மனநலப் பிரச்சினை இருந்ததாக நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
கியோ முன்னதாக புரிந்த குற்றங்களுக்காக கட்டாய மனநல சிகிச்சை உத்தரவை அவர் நிறைவேற்றிக்கொண்டு இருந்தபோது அவர் அந்த இருவரையும் தாக்கினார். கியோவின் மனநலப் பிரச்சினை, அவரது முந்தைய குற்றங்கள் குறித்த மேல்விவரங்கள் நேற்று நீதிமன்றத்தில் வெளியிடப்படவில்லை.
கியோ நடத்திய தாக்குதலில் காப்பிக்கடை நடத்துநரான 'ஜிஎச்கே ஹோல்டிங்ஸ்' நிறுவனத்தின் தலைவர் திரு கோ ஹுங் குவாங், 69, என்பவரின் இடது கையில் கீறல்கள் விழுந்தன.
அந்த நிறுவனத்தில் மேலாளராக உள்ள திரு கோவின் மகன் திரு ரேமண்ட் கோ மெங் சுவான், 31, என்பவருக்கும் நெஞ்சுப்பகுதி உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன. குற்றம் புரிந்த கியோவுக்கும் அவரால் தாக்கப்பட்ட தந்தை, மகனுக்கும் இடையிலான உறவுமுறை பற்றி நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
கியோவுக்கு மேலும் ஒரு கட்டாய மனநல சிகிச்சை உத்தரவை நிறைவேற்றுவதற்கான சாத்தியத்தை ஆராய மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.

