பணம் கையாடிய வழக்கறிஞர் சிறைக்குச் சென்ற ஒரு வாரத்தில் மாண்டார்

பணம் கையாடிய வழக்கறிஞர் சிறைக்குச் சென்ற ஒரு வாரத்தில் மாண்டார்

1 mins read
5818341a-7144-4caa-8ab1-a8024e7b2872
சமிந்தர் சிங் கில் ஏற்கெனவே இதய நோயால் பாதிக்கப்பட்டவர் என்று தெரிவிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தமது கட்சிக்காரர்களின் பணத்தைக் கையாடிய குற்றத்துக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட வழக்கறிஞர், சிறைக்குச் சென்ற ஒரு வாரத்தில் மரணம் அடைந்ததாக மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதியன்று 57 வயது சமிந்தர் சிங் கில்லுக்கு 27 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதியன்று தமது சிறையறையில் அவர் சுயநினைவின்றி கிடந்தார்.

அவர் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை உறுதி செய்தது.

திரு கில் ஏற்கெனவே இதய நோயால் பாதிக்கப்பட்டவர் என்று மரண விசாரணை அதிகாரியிடம் இன்று தெரிவிக்கப்பட்டது. அவரது மரணம் இயற்கையானது என்று தெரிவிக்கப்பட்டது.

சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பு மருத்துவர்கள் அவரைப் பரிசோதனை செய்ததாகவும் அவரது உடல்நிலையில் எவ்வித பிரச்சினையும் தென்படவில்லை என்றும் அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்தார்.

சிறைக்குள் இருக்கும் கண்காணிப்பு கேமரா பதிவுகள் நீதிமன்றத்தில் ஒளிபரப்பப்படும் என்றும் திரு கில்லின் குடும்பத்தார், சம்பந்தப்பட்ட நீதிமன்ற அதிகாரிகள் மட்டுமே அப்பதிவுகளைக் காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அந்தப் பதிவுகளைக் காண திரு கில்லின் குடும்பத்தார் மறுத்துவிட்டனர்.

அப்பதிவுகள் மனவேதனையைத் தரும் என்பதால் அவர்கள் அந்த முடிவை எடுத்ததாக அவர்களது வழக்கறிஞர்களில் ஒருவரான திரு ஆர்.எஸ். பஜ்வா தெரிவித்தார்.