அதிபர் விருதுக்கான தகுதிகளில் மாற்றம்

அதிபர் விருதுக்கான தகுதிகளில் மாற்றம்

2 mins read
8dfcc4a6-8717-4984-bc99-eb1eaec4b797
சிங்கப்பூரை நீடித்த, நிலைத்தன்மயைான நாடாக உருவாக்க சமூகத்தையும் ஈடுபடுத்தும் முயற்சிகளை ஒருவர் மேற்கொண்டுள்ளாரா என்பதும் அவர் அதிபர் விருது பெறும் தகுதிகளில் ஒன்றாக எடுத்துக்கொள்ளப்படும். படம்: பிஸ்னஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரை நீடித்த, நிலைத்தன்மயைான நாடாக உருவாக்க சமூகத்தையும் ஈடுபடுத்தும் முயற்சிகளை ஒருவர் மேற்கொண்டுள்ளாரா என்பதும் அவர் அதிபர் விருது பெறும் தகுதிகளில் ஒன்றாக எடுத்துக்கொள்ளப்படும். இது தொடர்பான முயற்சிகள் யாவும் 2030 ஆண்டு சிங்கப்பூர் பசுமைத் திட்டத்தின் பிரதிபலிப்பாக பார்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில், "இதில் சுற்றுச்சூழல் தொடர்பான நடவடிக்கைகள், பங்காளித்துவ முயற்சிகள் போன்றவற்றை மதிப்பிடும் அதே வேளையில், விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஒருவர் நீடித்த நிலைத்தன்மையுடைய சிங்கப்பூரை உருவாக்க அந்த நபர் பரந்த சமூகத்தையும் ஈடுபடுத்தியுள்ளாரா என்பதும் கவனத்தில் கொள்ளப்படும்," என்று கூறியது.

சிங்கப்பூரின் 2030ஆம் ஆண்டு பசுைமத் திட்டத்தை அரசாங்கம் சென்ற மாதம் வெளியிட்டது. அதன்படி, 2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரில் உள்ள பள்ளிகளில் 20 விழுக்காடு பள்ளிகள் கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத பள்ளிகளாக இருக்கும்.

அத்துடன், சுற்றுப்புறத்தை மாசுபடுத்தாத வகையில் பயணம் செய்ய ஊக்குவிக்கப்படுவதுடன், சைக்கிளோட்ட பாதைகள் தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் மும்மடங்கு அதிகமானதாக இருப்பதுடன் ரயில் தடங்களும் விரிவுபடுத்தப்படும்.

இவற்றுடன் வேலையில் ஈடுபட்டிருக்கும் பெரியவர்கள் குறைந்த மாசுடைய கட்டடங்களில் வேலை பார்ப்பர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 2030ஆம் ஆண்டு இயற்கை வனப்பகுதி தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் 50 விழுக்காடு அதிகமாக இருப்பதுடன் பொதுமக்கள் அங்கு நடைப்பயணம் மேற்கொள்ளவும் பறவை இனத்தைக் கண்டு களிக்கவும் ஏதுவாக விளங்கும்.

அதிபர் விருது தனி நபர்கள், அமைப்புகள், பொதுத் துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என அனைவரின் பணியையும் அங்கீகரிக்கும் வகையில் அமையும்.

"அதிபர் விருது சுற்றுச்சூழலில் தொடர்ந்து பங்களித்து சாதனையாளர்களாக விளங்கும் நபர்கள், பொதுத் துறை, தனியார் துறை அமைப்புகள், நிறுவனங்கள் என அனைவரையும் அங்கீகரித்து கௌரவிக்கும். இப்படிச் செய்வதன் மூலம் இவர்களைப் பின்பற்றி மற்றவர்களும் சுற்றுச்சூழலில் உள்ள சவால்களை எதிர்கொள்ள ஊக்கமூட்டும் வகையில் விருது அமையும்," என அமைச்சு தனது அறிக்கையில் விளக்கியது.

இந்த விருதுக்கு பரிந்துரை செய்வோர், நேற்றிலிருந்து ஏப்ரல் மாதம் 30ஆம் தேதிவரை தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம்.