மோசடி, கடன்முதலை நடவடிக்கை ஆகிய குற்றங்கள் தொடர்பாக 250க்கும் மேற்பட்டோரிடம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 14 வயதுக்கும் 74 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
அவர்களில் 172 ஆடவர்களும் 81 பெண்களும் அடங்குவர்.
இந்தச் சந்தேக நபர்கள் 560 மோசடி வழக்குகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று போலிசார் நம்புகின்றனர்.
இவர்களிடம் ஏமாந்தவர்கள் $4.1 மில்லியனுக்கும் அதிகமான தொகையை இழந்துள்ளனர்.
கடந்த மாதம் 27ஆம் தேதியிலிருந்து இம்மாதம் 12ஆம் தேதி வரை சிங்கப்பூரில் உள்ள பல வட்டாரங்களில் நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மோசடி, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குதல், உரிமம் இல்லாமல் கட்டணம் செலுத்தும் சேவைகளை வழங்குதல் ஆகிய குற்றங்கள் தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
மோசடி குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டு சிறை, $500,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
உரிமம் இல்லாமல் கட்டணம் செலுத்தும் சேவை நடத்தும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டு வரை சிறை, $125,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

