தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாக்டீரியா கிருமி: மலேசிய முட்டைகளை மீட்டுக்கொள்ள உத்தரவு

2 mins read
00f694f0-1c8d-4b63-9d0b-c9159403d884
-

மலேசியாவின் 'லே ஹோங் பெர்ஹாட் லாயர் ஃபார்ம் ஜெராம்' என்ற பண்ணையைச் சேர்ந்த முட்டைகளை மீட்டுக்கொள்ளும்படி அவற்றை இறக்குமதி செய்யும் நான்கு நிறுவனங்களுக்குச் சிங்கப்பூர் உணவு முகவை அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

மலேசியாவின் அந்தப் பண்ணைக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கிருமிகள் இல்லாமல் எல்லாவற்றையும் சரிசெய்தால்தான் இந்தத் தடை அகலும் என்று முகவை தெரிவித்துள்ளது.

ஆங் செங் எக்ஸ் சப்ளேயர், டாசூன், ஹெங் குவான் ஃபுட் இன்டஸ்ட்ரியல், லாம் லெங் டிரேடிங் ஆகிய நிறுவனங்கள் அந்தப் பண்ணை முட்டைகளை இறக்குமதி செய்து வருகின்றன.

'CES008' என்ற முத்திரை உள்ள முட்டைகளில் ஒரு வகை பாக்டீரியா கிருமிகள் இருப்பதாகவும் அந்த முட்டைகளைப் பாதி வேகவைத்து அல்லது பச்சையாக உட்கொண்டால் உணவு தொடர்பான நோய்கள் மனித உடலில் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் இந்த முகவை எச்சரித்துள்ளது. அந்த முட்டைகளில் 'எஸ்இ' என்ற கிருமி இருப்பது தெரியவந்ததாக முகவை குறிப்பிட்டது.

இந்த வகை பாக்டீரியா கிருமி முட்டை ஓட்டின் வெளிப்புறத்திலும் உள்ளேயும் இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ள இந்த முகவை, யாராவது அந்த வகை முட்டைகளை ஏற்கெனவே வாங்கி இருந்தால் பாக்டீரியா கிருமிகள் செத்துப் போகும்வரை முட்டைகளை முற்றிலும் வேகவைத்துவிடும்படி ஆலோசனை கூறியது.

இதனிடையே, சூழ்நிலையைத் தாங்கள் கண்காணித்து வருவதாக மலேசிய அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். உள்ளூர்ச் சந்தையில் முட்டை கிடைப்பதில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தான் மதிப்பிட்டு வருவதாக மலேசியாவின் உள்நாட்டு வர்த்தக, பயனீட்டாளர் விவகார அமைச்சு கூறியது.