வீடுகளில் தீ: பாதிப்பு அதிகம், அலட்சியம் வேண்டாம்

வீடுகளில் தீ: பாதிப்பு அதிகம், அலட்சியம் வேண்டாம்

1 mins read
5c1b77e9-a8b4-4693-b90c-ea8cd7536704
-

சிங்கப்பூரில் குடியிருப்பு இடங்களில், தனியார், அரசாங்க இடங்களில் நிகழ்ந்த தீ சம்பவங்கள் 2019ல் 1,168 ஆக இருந்தது. அது சென்ற ஆண்டில் 1,054 ஆகக் குறைந்தது.

சமைக்கும் போது அடுப்பை அணைக்காமல் எரியவிட்டுவிட்டு செல்வது; கண்டபடி குப்பைப் பொருட்களைக் கைவிடுவது; மின்சார இணைப்புக் குறைபாடுகள் ஆகியவையே தீ சம்பவங்களுக்கான முக்கிய காரணங்களாக இருந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது.

அண்மைய காலத்தில் வீடுகளில் தீ விபத்துகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு நிகழ்ந்த காரணத்தால் காப்புறுதி நிறுவனங்களிடமிருந்து வீடு மற்றும் தீ காப்புறுதி பாதுகாப்பைக் குடியிருப்பாளர்கள் பெற வேண்டும் என்ற கருத்து முக்கிய இடத்தைப் பெற்றது.

இதனிடையே, அடுக்குமாடி வீட்டில் தீ மூண்டால் உயிர்ச்சேதம் இன்றி தீயணைப்புச் சாதனத்தைக் கொண்டு தீயை அணைக்க முயலவேண்டும் என்று சிங்கப்பூர் தீ பாதுகாப்பு நிர்வாகிகள் சங்கத்தின் தலைவர் பெனிடிக்ட் கோ தெரிவித்தார்.

தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் 995 எண் மூலம் தற்காப்புப் படைக்குத் தகவல் தெரிவித்துவிட்டு உடனே வீட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.

தீயணைப்புச் சாதனம், தீ எச்சரிக்கை மணி முதலானவை வீடுகளில் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.