உலகமய ஏற்பாட்டு முறைக்கு நெருக்குதல் ஏற்பட்டு இருக்கிறது. இருந்தாலும் அதற்கு ஆதரவும் தேவையும் இன்னும் வலுவாக இருக்கின்றன. நாடுகள் ஒத்துழைக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடவில்லை என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார்.
சிங்கப்பூரில் உலகமயம் ஒவ்வொருவருக்கும் நன்மை அளித்து இருக்கிறது என்றும் பிபிசிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.
"பன்னாட்டு நிறுவனங்கள் சிங்கப்பூரில் செயல்படவில்லை என்றால், அல்லது அனைத்துலக வர்த்தகம் இடம்பெறவில்லை என்றால், திறந்த பொருளியலை சிங்கப்பூர் கொண்டிருக்கவில்லை என்றால் நம் அனைவருக்குமே பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை," என்று திரு லீ தெரிவித்தார்.
பாதுகாப்பு, போட்டித்திறன், தொழில்நுட்பக் கட்டுப்பாடு ஆகியவை தொடர்பில் நாடுகளுக்கு இடையில் பதற்றம் இருக்கும் என்பதை ஒப்புக்கொண்ட திரு லீ, இருந்தாலும் ஒன்று மற்றொன்றுடன் சேர்ந்து செயல்பட வேண்டிய அவசியத்தைத் தவிர்த்துவிட இயலாது என்றார்.
கொவிட்-19 தடுப்பூசியை எடுத்துக்காட்டாக அவர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு நாடும் சொந்தமாக அதைத் தயாரித்துவிட முடியாது என்று கூறிய அவர், தடுப்பூசியை உருவாக்கக்கூடிய நாடுகள், ஒன்று மற்றொன்றுடன் ஒத்துழைக்க வேண்டிய தேவை இருப்பதைச் சுட்டினார்.
உலகமயத்திற்கு நெருக்கடி ஏற்பட்டு இருந்தாலும் நாடுகளும் நிறுவனங்களும் எல்லை கடந்து ஒத்துழைக்க வேண்டிய தேவை மறைந்துவிடாது என்பதே தனது எண்ணம் என்றார் அவர்.
உலகமயம் காரணமாக கை விடப்பட்டதாக மக்களில் பலரும் கருதும் சூழலில் சிங்கப்பூருக்கு புதிய பொருளியல் முன்மாதிரி தேவையா என்று பிபிசி பேட்டியாளர் கரிஷ்மா வஸ்வானி கேட்டதற்குப் பதிலளித்த பிரதமர், உலகமயம் சிங்கப்பூரில் ஒவ்வொருவருக்கும் நன்மை அளித்து இருப்பதாகத் தெரிவித்தார்.

