தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

82 பேருக்கு இரைப்பை பிரச்சினை; உணவு நிறுவனத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்திவைப்பு

2 mins read
d22680e0-9ffc-4d04-9c02-d8efdcf4c316
எண் 3015 பிடோக் நார்த் ஸ்திரீட் 5ல் அமைந்துள்ள 'சில்லி அப்பி' நிறுவனம் அதன் செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. படம்: சில்லி அப்பி கேட்டரிங்/இன்ஸ்டகிராம் -

'சில்லி அப்பி கேட்டரிங்' எனும் உணவுச் சேவை வழங்கும் நிறுவனம் தயாரித்த உணவைக் கடந்த வெள்ளிக்கிழமை அருந்திய பிறகு இரைப்பை பிரச்சினையால் அவதியுற்ற தெமாசெக் தொடக்கக் கல்லூரி பணியாளர்கள் எண்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தெமாசெக் தொடக்கக் கல்லூரி முதல்வர் லோ ஆய் நார் தெரிவித்தார். 'சில்லி அப்பி' நிறுவனம் தயாரித்த பகல் உணவை அருந்திய பின்னர் மொத்தம் 43 தொடக்கக் கல்லூரி பணியாளர்களுக்கு இரைப்பை பிரச்சினை ஏற்பட்டதாக திருமதி லோ கூறினார்.

"இதுகுறித்து கல்லூரிக்குத் தகவல் கிடைத்தவுடன், அந்த உணவுச் சேவை நிறுவனம் தயாரித்த அதே உணவை அருந்திய பின்னர் இரைப்பை பிரச்சினை ஏற்பட்டால் மருத்துவரிடம் செல்லுமாறு அனைத்துப் பணியாளர்களுக்கும் கல்லூரி அறிவுறுத்தியது," என்று திருமதி லோ விவரித்தார்.

இரைப்பை பிரச்சினைக்கான அறிகுறிகளில் வயிற்றுப்போக்கும் வாந்தியும் அடங்கும்.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்துப் பணியாளர்களின் உடல்நலனையும் தெமாசெக் தொடக்கக் கல்லூரி அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவை அது நீட்டிப்பதாகவும் திருமதி லோ மேலும் சொன்னார்.

இதன் தொடர்பில் விசாரணையில் உதவ சுகாதார அமைச்சுடனும் சிங்கப்பூர் உணவு அமைப்புடனும் அக்கல்லூரி பணியாற்றி வருகிறது.

இந்நிலையில், இந்த நச்சுணவுச் சம்பவத்தைத் தொடர்ந்து எண் 3015 பிடோக் நார்த் ஸ்திரீட் 5ல் அமைந்துள்ள 'சில்லி அப்பி' நிறுவனம் அதன் செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமைக்கும் வெள்ளிக்கிழமைக்கும் இடையே அந்த நிறுவனம் தயாரித்த உணவை அருந்திய பின்னர் இரைப்பை பிரச்சினையால் அவதியுற்ற 82 பேரில் மேற்கூறப்பட்ட தெமாசெக் தொடக்கக் கல்லூரி பணியாளர்களும் அடங்குவர் என நம்பப்படுகிறது.

அந்த 82 பேரில் 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் சுகாதார அமைச்சும் சிங்கப்பூர் உணவு அமைப்பும் நேற்று (மார்ச் 14) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்