'ஐபிபிடி' எனப்படும் தனிநபர் உடலுறுதி சோதனைக்கான பயிற்சிகளில் மாற்றம் குறித்து சிங்கப்பூர் ஆயுதப் படை
'ஐபிபிடி' எனப்படும் தனிநபர் உடலுறுதிச் சோதனைக்கான ஆயத்த, மறுதேர்ச்சிக்கான பயிற்சிகளுக்குப் பதிலாக சிங்கப்பூர் ஆயுதப் படை, புதிய திட்டம் ஒன்றை ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்தவுள்ளது.
தற்போது ஐபிபிடி தொடர்பிலான பயிற்சி அம்சங்களுக்குப் பதிலாக பத்து வகுப்புகள் கொண்ட 'என்எஸ் உடலுறுதி மேம்பாட்டுப் பயிற்சி திட்டம்' (ஃபிட்) அறிமுகப்படுத்தப்படும் என்று எஸ்ஏஎஃப் நேற்று தெரிவித்தது. இத்திட்டத்தின்கீழ் 45 இடங்களில் பயிற்சியை மேற்கொள்ள முடியும். தற்போது இத்திட்டத்திற்கென இயங்கிவரும் 13 இடங்களில், தயார்நிலைப் போர்க்கால தேசிய சேவையாளர்கள் பயிற்சியை மேற்கொள்ளலாம்.
புதிய திட்டத்தின்கீழ், குறைந்தது ஆறு வெவ்வேறு 'என்எஸ் ஃபிட்' பயிற்சி நடவடிக்கைகளிலிருந்து தேர்ந்தெடுத்த தங்களின் 10 வகுப்புகளை தேசிய சேவையாளர்கள் மேற்கொள்ளலாம். மார்ச் 25 முதல் ns.sg தளம் வழி பயிற்சி வகுப்புகளுக்குப் பதிவுசெய்யலாம்.
ஐபிபிடியில் தேறாதோர், தன்னிச்சையான 10 ஐபிபிடி ஆயத்தப் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லலாம். அல்லது 20 மறுதேர்ச்சிப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கலாம். இதுவரை இப்படித்தான் நடந்து வந்துள்ளது.
இது 'சிக்கலானது' என்று குறிப்பிட்ட தேசிய சேவை விவகாரங்களின் இயக்குநர் பிரிகேடியர்-ஜெனரல் கென்னத் லியாவ், வருடாந்திர உடலுறுதித் தகுதிக்குரிய அமைப்புமுறையை ஒரு பொதுப்படையான திட்டமாக 'ஃபிட்' நெறிப்படுத்தும் என்றார்.
ஒவ்வோர் 'என்எஸ் ஃபிட்' வகுப்பும் 60 முதல் 75 நிமிடங்களுக்கு நீடிக்கும். தேசிய சேவையாளர்களின் பரபரப்பான வாழ்க்கைச் சூழலுடன் வகுப்புகளை எளிதில் இணைக்க முடியும் என்றார் அவர்.
தேசிய சேவை மறுஆய்வுக் குழுவின் திட்டங்களில் ஒன்றான இது, எஸ்ஏஎஃப், சுகாதார மேம்பாட்டு வாரியம், ஸ்போர்ட் சிங்கப்பூர் ஆகியவற்றின் கூட்டணியில் அமைந்ததும் ஆகும்.
தற்போது பூங்காக்கள், சாஃப்ரா உடற்பயிற்சிக் கூடங்கள், ராணுவ முகாம்களில் அமைந்த உடலுறுதி நிலையங்கள் ஆகியவற்றில் பயிற்சி இடங்கள் அமைந்துள்ளன. இவற்றுடன் 'எக்டிவ்எஸ்ஜி'யின் மூன்று உடற்பயிற்சிக் கூடங்கள், சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் 29 இடங்கள் ஆகியவற்றிலும் என்எஸ் ஃபிட் திட்டத்தின் கீழ் தேசிய சேவையாளர்கள் பயிற்சி பெறலாம்.
உள்துறைக் குழுவின் தேசிய சேவையாளர்களும் ஜூன் மாதம் முதல் என்எஸ் ஃபிட் திட்டத்தில் இணைவர் என்று கூறப்பட்டது.