கொள்ளைநோய்ச் சூழலால் நேரடி பயிற்சி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தங்களின் பணிக்குத் தேவைப்படும் பயிற்சிகளைத் தொடர்ந்து அதிகாரிகள் மேற்கொள்ள, உள்துறைக் குழு பயிற்சிக் கழகத்தைச் சேர்ந்த பயிற்றுவிப்பாளர்கள் தங்களின் திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி), சிங்கப்பூர் போலிஸ் படை (எஸ்பிஎஃப்), சிங்கப்பூர் சிறைச்சாலை சேவை (எஸ்ப்பிஎஸ்) போன்ற வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்த உள்துறை அதிகாரிகள், தங்களின் பயிற்சிகள் தடையின்றி நடப்பதை உறுதிசெய்ய 'ஸூம்', மின்னிலக்க நாட்குறிப்புக்குரிய கைபேசி செயலிகள், காணொளி வழி தொலைபேசி அழைப்புகள் எனப் பலதரப்பட்ட உத்திகளைக் கையாண்டு வருகின்றனர்.
2019ஆம் ஆண்டின் போதைப்பொருள்களின் தவறான பயன்பாட்டுக்கான திருத்தச் சட்டத்தை அடுத்து இது தொடர்பில் பயிற்சி அளிப்பது அவசியமானது. இத்திருத்தச் சட்டத்தின்படி போதையர் மறுவாழ்வு நிலையம் அல்லது சிறையிலிருந்து விடுதலையாகும் போதைப்புழங்கிகளைக் கண்காணிக்கும் காலகட்டம் ஈராண்டிலிருந்து ஐந்தாண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.
போதைப்பொருள் தொடர்பில் கண்காணிக்கப்படும் நபர்களின் தேவைகளை அடையாளம் காண்பது, அந்தந்த சமூகச் சேவை அமைப்புகளுக்கு அவர்களை அனுப்புவது போன்றவை தொடர்பில் சிஎன்பி அதிகாரிகளுக்குச் சமூகக் கண்காணிப்புத் திறன்களை வளர்க்கும் பயிற்சி வகுப்பு தேவைப்பட்டதாகக் கூறப்பட்டது. இதற்காக காணொளி வழி தொலைபேசி அழைப்புகள் செய்யப்பட்டன.
இரண்டு மாதங்களில் உள்துறைக் குழு பயிற்சிக் கழகம் நடத்திய மெய்நிகர் வகுப்புகளுக்கு மொத்தம் உள்ள 1,500 பயிற்றுவிப்பாளர்களும் சென்றனர்.