ஆக அண்மையில் வெளிவந்துள்ள நகர மன்ற நிர்வாக அறிக்கையில், தெம்பனிஸ் நகர மன்றமே கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. ஆளுமை, குடியிருப்புப் பேட்டையின் பராமரிப்பு ஆகிய அம்சங்களில் நகர மன்றத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 'ஏம்பர்' நிறத் தரக்குறியீடு அதற்கு வழங்கப்பட்டுள்ளது.
குடியிருப்புப் பேட்டை பராமரிப்பு தொடர்பில் அல்ஜுனிட்-ஹவ்காங் நகர மன்றத்திற்கும் 'ஏம்பர்' தரக்குறியீடு கிடைத்தது.
இம்முடிவுகள் யாவும் 2020ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதியன்று முடிவடைந்த 2019 நிதியாண்டுக்குரிய நகர மன்ற நிர்வாக அறிக்கையில் வெளியிடப்பட்டன. குடியிருப்புப் பேட்டையின் தூய்மை, அதன் பராமரிப்பு, மின்தூக்கிச் செயல்பாடு, சேவை பராமரிப்புக் கட்டணத்தில் நிலுவைத் தொகை நிர்வாகம், நிறுவன ஆளுமை ஆகிய ஐந்து அம்சங்களின் அடிப்படையில் நகர மன்றங்களின் செயல்பாடுகள் இந்த வருடாந்திர அறிக்கையில் மதிப்பிடப்படும்.
நகர மன்றங்களும் அவற்றின் கணக்காய்வாளர்களும் சமர்ப்பித்திருந்த அளவிடக்கூடிய, நடுநிலையான தகுதிவிதிகளைக் கொண்டு பச்சை, 'அம்பர்', சிவப்பு ஆகிய நிறங்களில் தரக்குறியீடுகள் வழங்கப்படும்.
நிறுவன ஆளுமை தொடர்பில் 'ஏம்பர்' தரக்குறியீட்டைப் பெற்ற ஒரே நகர மன்றம், தெம்பனிஸ் நகர மன்றம்தான். குடியிருப்புப் பேட்டையின் நிர்வாகத்திலும் அது சிறப்பாகச் செயல்படவில்லை. பொது இடங்களில் இடையூறு, எளிதில் தீப்பற்றிக்கொள்ளும் தன்மையுடைய பொருள்கள் பொது இடங்களில் காணப்படுதல் உட்பட சில குறைபாடுகள் காணப்பட்டன.
மாதாந்திர சேவை, பராமரிப்புக் கட்டணத்தில் 40 முதல் 50 விழுக்காடு நிலுவையில் இருந்ததால் சுவா சூ காங் நகர மன்றத்திற்கு இந்த அம்சம் தொடர்பில் 'ஏம்பர்' தரக்குறியீடு வழங்கப்பட்டது.
தேசிய வளர்ச்சி அமைச்சு வெளியிடும் இந்த அறிக்கை, இம்முறை தாமதமாக வெளிவந்துள்ளது. கொவிட்-19 கொள்ளைநோயால் தணிக்கை செய்யப்பட்ட தங்களின் நிதி அறிக்கைகளையும் நிறுவன ஆளுமை சரிபார்ப்பு பட்டியல்களையும் சமர்ப்பிக்க நகர மன்றங்களுக்குக் கூடுதல் கால அவகாசம் தரப்பட்டது.
சென்ற ஏப்ரல் மாதத்திற்கும் இவ்வாண்டு மார்ச் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்திற்கு நகர மன்றங்களின் மதிப்பீட்டை நிறுத்தி வைத்துள்ளதாகத் தெரிவித்த தேசிய வளர்ச்சி அமைச்சு, 2020 நிதியாண்டுக்கு நகர மன்ற நிர்வாக அறிக்கையை வெளியிடாது என்றது. கிருமி முறியடிப்புக் காலகட்டம், பொதுத்தேர்தல் 2020 ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
அடுத்த ஆண்டு முதல் தேசிய வளர்ச்சி அமைச்சு இரண்டு அறிக்கைகளை வெளியிடும். குடியிருப்புப் பேட்டையின் தூய்மை நிலை, பராமரிப்பு, மின்தூக்கிச் செயல்பாடு, சேவை மற்றும் பராமரிப்புக் கட்டண நிலுவை நிர்வாகம் ஆகிய செயல்பாட்டு அம்சங்களைப் பற்றிய அறிக்கை ஒவ்வோர் ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்தில் வெளியிடப்படும். நிறுவன ஆளுமை தொடர்பான அறிக்கை நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும். புதிய நகர வட்டாரங்கள், 17 நகர மன்றங்கள் ஆகியவை தொடர்பில் இந்த அறிக்கைகள் அமைந்திடும்.

