இதுவரை 82 பேருக்கு உடல்நலக் குறைவு; 14 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
'சில்லி அப்பி கேட்டரிங்' என்ற உணவுச் சேவை வழங்கும் நிறுவனம் தயாரித்த உணவைக் கடந்த வெள்ளிக்கிழமை உண்ட பிறகு இரைப்பை பிரச்சினையால் அவதியுற்ற தெமாசெக் தொடக்கக் கல்லூரி பணியாளர்கள் எண்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தெமாசெக் தொடக்கக் கல்லூரி முதல்வர் லோ ஆய் நார் தெரிவித்தார். 'சில்லி அப்பி' நிறுவனம் தயாரித்த பகல் உணவைச் சாப்பிட்ட பின்னர் மொத்தம் 43 தொடக்கக் கல்லூரி பணியாளர்களுக்கு இரைப்பை பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறினார்.
"இதுகுறித்துக் கல்லூரிக்குத் தகவல் கிடைத்தவுடன், உணவுச் சேவை நிறுவனம் தயாரித்த அதே உணவை உண்ட பின்னர் இரைப்பை பிரச்சினை ஏற்பட்டால் மருத்துவரிடம் செல்லுமாறு அனைத்துப் பணியாளர்களுக்கும் கல்லூரி அறிவுறுத்தியது," என்றார் திருமதி லோ. இரைப்பை பிரச்சினைக்கான அறிகுறிகளில் வயிற்றுப்போக்கும் வாந்தியும் அடங்கும்.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்துப் பணியாளர்களின் உடல்நலனையும் தெமாசெக் தொடக்கக் கல்லூரி அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவை அது நீட்டிப்பதாகவும் திருமதி லோ மேலும் சொன்னார்.
இதன் தொடர்பான விசாரணையில் சுகாதார அமைச்சுடனும் சிங்கப்பூர் உணவு அமைப்புடனும் அக்கல்லூரி பணியாற்றி வருகிறது. இந்த நச்சுணவுச் சம்பவத்தைத் தொடர்ந்து எண் 3015 பிடோக் நார்த் ஸ்திரீட் 5ல் அமைந்துள்ள 'சில்லி அப்பி' நிறுவனம் அதன் செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமைக்கும் வெள்ளிக்கிழமைக்கும் இடையே அந்த நிறுவனம் தயாரித்த உணவை உட்கொண்ட பின்னர் இரைப்பை பிரச்சினையால் அவதியுற்ற 82 பேரில் மேற்கூறப்பட்ட தெமாசெக் தொடக்கக் கல்லூரி பணியாளர்களும் அடங்குவர் என நம்பப்படுகிறது.
அந்த 82 பேரில் 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் சுகாதார அமைச்சும் சிங்கப்பூர் உணவு அமைப்பும் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.
2019ல் 'சி' குறியீடு வழங்கப்பட்டது
'சில்லி அப்பி கேட்டரிங்' தயாரித்த உணவைச் சாப்பிட்ட 24 பேர் இதேபோல் இரைப்பை பிரச்சினையால் பாதிக்கப்பட்டனர். 2019ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதியன்று நடந்த இச்சம்பவத்தைத் தொடர்ந்து சிங்கப்பூர் உணவு அமைப்பு, 'சில்லி அப்பி கேட்டரிங்' நிறுவனத்தின் சுகாதாரக் குறியீட்டை 'ஏ'யிலிருந்து 'சி'க்கு இறக்கியது.