மனநலம் தொடர்பில் எழுத ஊடகத்துறைக்கு வழிகாட்டி

மனநலம் தொடர்பில் எழுத ஊடகத்துறைக்கு வழிகாட்டி

3 mins read

மன­ந­லப் பிரச்­சி­னை­கள் தொடர்­பில் புதிய வழி­காட்டி ஒன்றை தேசிய சமூ­க சேவை மன்­றம் (என்­சி­எஸ்­எஸ்) வெளி­யிட்­டுள்­ளது. மன­ந­லம் தொடர்­பான செய்­தி­களை எழு­தும்­போது தவிர்க்­கப்­ப­ட­வேண்­டிய சொற்­களும் தொடர்­களும் இந்த புத்­த­கத்­தில் இடம்­பெற்­றுள்­ளன. உதா­ர­ணத்­திற்கு, 'மன­ந­லம் சரி­யில்­லா­த­வர்', 'பைத்­தி­யம்' போன்­ற­வற்­றைக் காட்­டி­லும் 'மன­ந­லப் பிரச்­சினை உள்­ள­வர்' என்ற தொடரே சிறப்பு.

மேலும் 'பியோண்ட் தி லேபல் மீடியா கைட்' என்ற இந்த வழி­காட்டி புத்­த­கத்­தில் மன­ந­லப் பிரச்­சினை உள்ள ஒரு­வரை நேர்­கா­ண­லுக்கு அணு­கும்­போது அவ­ரி­டம் எவ்­வாறு கேள்வி கேட்­பது, செய்­தியை எந்தக் கோணத்­தி­லி­ருந்து எழு­து­வது, செய்­திக்­குத் தலைப்பு எவ்­வாறு இடு­வது, வன்­முறை மற்­றும் உயிரை மாய்த்­துக்­கொள்­ளும் சம்­ப­வங்­க­ளைப் பற்றி செய்தி எழு­தும் முறை ஆகி­யவை குறித்து ஆலோ­ச­னை­களும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.

சமூ­கச் சேவை அமைப்­பு­கள், மன­நல சுகா­தார நிபு­ணர்­கள், மன­நலப் பிரச்­சி­னை­கள் உள்­ள­வர்­கள், உள்­ளூர் ஊட­கத் துறை­யி­னர் ஆகி­யோ­ரு­டன் கலந்­தா­லோ­சித்து இந்த வழி­காட்டி உரு­வாக்­கப்­பட்­டது.

மன­ந­லப் பிரச்­சி­னை­கள் உள்ளவர்­கள் தொடர்­பில் சம்­ப­வங்­களைப் பற்­றியோ, மன­ந­லம் தொடர்­பான விவ­கா­ரங்­கள் பற்­றியோ ஊட­கத்­துறை நிபு­ணர்­கள் எழு­தும்­போது இவ்­வ­ழி­காட்டி புத்­த­கம், தகுந்த பரிந்­து­ரை­களை அளிக்­கும் என்­றார் என்­சி­எஸ்­எ­சின் தலை­வர் திரு­வாட்டி அனிதா ஃபேம்.

"மன­ந­லம் பற்­றிய விழிப்­பு­ணர்­வு­டன் மக்­க­ளின் தவ­றான சிந்­தனையை மாற்ற ஊக்­கு­விக்­க­வும் அவர்­க­ளின் மனப்­போக்கு, நடத்தை ஆகி­ய­வற்­றில் ஒரு மாற்­றத்­தைக் கொண்­டு­வ­ர­வும் ஊட­கத்­துறை முக்­கிய பங்­காற்றி வரு­கிறது. மேலும், மன­ந­லப் பிரச்­சி­னை­கள் தொடர்­பில் ஒரு­வ­ருக்கு ஏற்­ப­டக்­கூ­டிய களங்­க­மும் ஒரு சிக்­க­லாக உள்­ளதை மக்­கள் அறி­வர்," என்­றார் திரு­வாட்டி ஃபேம்.

மன­ந­லம் தொடர்­பான செய்தி அறிக்­கை­களில் 40% குற்­றச்­செ­யல் தொடர்­பாக இருந்­த­தாக சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கத்­து­டன் என்­சி­எஸ்­எஸ் இணைந்து மேற்­கொண்ட ஆய்­வில் தெரிய வந்­தது. இதை­ய­டுத்து இவ்­வ­ழி­காட்டி அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

மாறாக, 15% மட்­டுமே பரா­மரிப்பு, தடுப்பு, மீண்­டு ­வ­ரு­தல் ஆகி­ய­வற்றை மைய­மா­கக் கொண்­டி­ருந்­த­தாக ஆய்வு கூறி­யது. மன­நோ­யை­யும் குற்­றச்­செ­ய­லை­யும் மக்­கள் தொடர்­பு­ப­டுத்த இது கார­ண­மாக அமைந்­தி­ட­லாம் என்­றது என்­சி­எஸ்­எஸ்.

2016க்கும் 2019க்கும் இடைப்­பட்ட காலத்­தில் வெளி­வந்த 2,000 உள்­ளூர் ஊட­கச் செய்­தி­கள் இந்த ஆய்­வில் ஆரா­யப்­பட்­டன.

மேலும், 'மன­ந­லம் சரி­யில்­லா­த­வர்' போன்ற தவிர்க்­கப்­பட வேண்­டிய தொடர்­கள் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தா­க­வும் குறிப்­பாக தலைப்­பு­களில் அவை இடம்­பெற்­ற­தா­க­வும் ஆய்வு கண்­ட­றிந்­தது.

'தோல் பிரச்­சினை, புற்­று­நோய் என உடல்­ரீ­தி­யாக பாதிக்­கப்­பட்ட ஒரு­வர், இன்­னொ­ரு­வ­ரைத் தாக்­கி­னார்' என்று நாம் கூறா­த­போது ஏன் மன­நோ­யைப் பற்றி குறிப்­பிட வேண்­டும் என வின­வி­னார் லாப நோக்­கற்ற சில்­வர் ரிப்­பன்அமைப்­பின் நிர்­வாக இயக்­கு­நர் திரு­வாட்டி போர்ஷா போ.

மன­ந­லம் தொடர்­பில் ஆக்­க­பூர்­வ­மான செய்­தி­களை வெளி­யிடு­வ­தன் வழி, இத்­த­கைய பிரச்­சி­னை­கள் உள்­ளோர் தங்­க­ளின் வாழ்க்­கையை பயன்­மிக்­க­தாக்­கிக் கொள்ள ஊக்­கம் பெறு­வர் என்­றார் திரு­வாட்டி போ.

கொள்ளைநோய்ச் சூழலில் மனநல

உதவி கோரிக்கைகள் அதிகரித்தன

 உயிரை மாய்த்துக்கொள்ளுதல், துயரம் ஆகியவை தொடர்பில் சிங்கப்பூர் அபய ஆலோசனைச் சங்கத்திற்கு (எஸ்ஓஎஸ்) சென்ற ஆண்டு 39,492 அழைப்புகள் வந்தன.சங்கத்திற்கு 2019ஆம் ஆண்டில் வந்த அழைப்புகள் 33,387. கொள்ளைநோய்ச் சூழலில் மேலும் 18% மக்களுக்கு மனநலப் பாதிப்பு தொடர்பில் உதவி தேவைப்பட்டது

 சென்ற ஏப்ரல் மாதத்திற்கும் ஜூன் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டும் உதவி கோரி சங்கத்திற்கு 10,671 அழைப்புகள் வந்தன. கிருமிப்பரவல் முறியடிப்புக் காலகட்டமும் பொருளியலை மீண்டும் திறக்கும் முதல் கட்டமும் இந்த மாதங்களில்தான் இடம்பெற்றன. இதே மூன்று மாதங்களில் 2019ஆம் ஆண்டில் 7,844 அழைப்புகள் மட்டுமே பதிவாகின.

 வாழ்க்கைத் துணை, குடும்ப உறுப்பினர்களுடன் மேலும் அதிக மோதல்கள் ஏற்பட்டதாக சங்கத்திற்கு அழைத்தவர்கள் கூறியிருந்தனர். நிதி நெருக்கடி, வேலை இழப்பு ஆகியவையும் மன அழுத்தம் தந்த குறிப்பிடத்தக்க அம்சங்களாக இருந்தன என்றும் ஒரு நபரின் சுய மதிப்பைக் குறைக்கும் வண்ணம் இவை இருந்தன என்றும் கூறப்பட்டது.

 துயரத்தில் இருப்போருக்கு உதவ 'கேர்டெக்ஸ்ட்' என்ற குறுஞ்செய்தி அனுப்பும் சேவையைச் சென்ற அக்டோபர் மாதத்தில் சங்கம் தொடங்கி வைத்தது. இதுவரை 3,000 உரையாடல்கள் இதன் மூலம் இடம்பெற்றுள்ளன. 29 வயதும் அதற்குக் குறைந்த வயதுடையோருமே சேவையைப் பயன்படுத்தியோரில் பெரும்பான்மையினர்.

 மனநலம் தொடர்பில் இயங்கி வரும் மற்ற அமைப்புகளுக்கும் உதவி கோரி வந்த அழைப்புகள் அதிகரித்திருந்தன. சிங்கப்பூர் ஆலோசனை நிலையத்திடம் உதவி நாடி வந்தவர்கள் 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020ஆம் ஆண்டில் 40% அதிகரித்ததாகக் கூறப்பட்டது.