சிங்கப்பூரர்களிடையே அதிகம் ஏற்படும் புற்றுநோய்களில் பெருங்குடல் புற்றுநோய் ஒன்று. ஆனால் அதை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிவதற்குத் தேவையான பரிசோதனைகளைப் பலர் செய்துகொள்வதில்லை என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
பரிசோதனையைச் செய்துகொள்ளும் 100,000 பேரில் கிட்டத்தட்ட ஏழு விழுக்காட்டினருக்குப் பெருங்குடல் புற்றுநோய் உண்டாகும் சாத்தியம் கண்டறியப்படுவதாக தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் டான் கெர் கான் கூறினார்.
பெருங்குடல் புற்றுநோயால் ஓர் ஆண்டில் 2,000க்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்படுவதாக அண்மைய ஆண்டு புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
"அடிக்கடி பரிசோதனைகள் செய்துகொண்டால் பெருங்குடல் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்துவிடலாம். அந்தக் கட்டத்தில்தான் எளிதில் சிகிச்சை அளித்துக் குணப்படுத்த முடியும்," என்றார் பேராசிரியர் டான்.
'ஃபிட்' எனும் பரிசோதனை முறைப்படி, மலத்தின் இரு மாதிரிகள் தேவைப்படும். ஒரே வாரத்தில் இரு வேறு தினங்களில் இந்த இரண்டு மாதிரிகளும் சேகரிக்கப்பட வேண்டும். அவற்றில் சிறிதளவு ரத்தம் இருந்தால் 'கொலொனோஸ்கோப்பி' பரிசோதனை செய்துகொள்ள அருகிலுள்ள பொது மருத்துவமனைக்கு அனுப்பப்படுவர்.
இந்தப் பரிசோதனைக்கான கருவிகள் சிங்கப்பூர் புற்றுநோய் சங்கத்தால் விநியோகம் செய்யப்படும். 2019ஆம் ஆண்டில் 68,000க்கு மேற்பட்டோரும் 2020ஆம் ஆண்டில் 50,000க்கு மேற்பட்டோரும் பரிசோதனையைச் செய்துகொண்டனர்.
இருப்பினும், இந்நோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளவர்கள், 'கொலொனோஸ்கோப்பி' செல்வதற்கு அதிக செலவாகும், குடலைப் பரிசோதனைக்குத் தயார்செய்வதில் தயக்கம் ஆகியவற்றால் தவிர்த்துவிடுவதாக பேராசிரியர் டான் தலைமையில் நடந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
கழிவுக் கட்டணத்தில் செய்யப்படும் கொலொனோஸ்கோப்பிக்கு $550 முதல் $700 வரை செலவாகும் என்றார் பேராசிரியர்.
இருப்பினும் பரிசோதனைக்குத் தயாராவதற்கு நான்கு முதல் ஆறு மணி நேரம் பிடிக்கும். அத்துடன் வயிற்றுப்போக்கையும் நோயாளிகள் அனுபவிக்க வேண்டியிருக்கும். சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்களின் அறிவுறுத்தல்கள், குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்களிடமிருந்து ஆதரவு உள்ள நிலையில் உயர் அபாயத்தில் உள்ள நபர்கள் பரிசோதனைக்குச் செல்ல ஊக்கம் பெறுவதாகவும் ஆய்வு கூறியது.

