கொவிட்-19 தடுப்பூசி தொடர்பான விதிமுறைகளை சுகாதார அமைச்சு கடந்த வாரம் தளர்த்தியதால், இப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள புற்றுநோயாளிகளும் ஒவ்வாமை உள்ளவர்களும் தகுதி பெற்றிருக்கிறார்கள்.
சிங்கப்பூர் மருத்துவ மன்றத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சு அனுப்பிய சுற்றறிக்கையில், 'எம்ஆர்என்ஏ' (mRNA) சார்ந்த கொவிட்-19 தடுப்பூசிகளில் பாதுகாப்பு தொடர்பிலான உள்ளூர் மற்றும் அனைத்துலக மருத்துவ அறிக்கைகளை தான் பின்பற்றுவதாகத் தெரிவித்தது.
இதற்கு முன், சுகாதார அமைச்சு பல வகையான ஒவ்வாமை பிரச்சினைகளை உள்ளவர்கள் 'எம்ஆர்என்ஏ' சார்ந்த கொவிட்-19 தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதைத் தள்ளிப்போடலாம் என்று அறிவுறுத்தியிருந்தது. ஃபைசர்-பயோஎன்டெக், மொடர்னா போன்ற சிங்கப்பூரில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளும் 'எம்ஆர்என்ஏ' சார்ந்த தடுப்பூசிகளில் அடங்கும்.
இதன் தொடர்பில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் 'ஆஸ்க்எஸ்டி' (askST) எனும் பகுதியில் இடம்பெற்ற சில கேள்விகளும் அதற்குரிய பதில்களும்.
கேள்வி: எனக்கு ஒவ்வாமை இருந்தால் நான் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?
பதில்: போடலாம். ஒருவேளை உங்களுக்கு 'அனாபிலாக்ஸிஸ்' பிரச்சினையோ அல்லது அபாயமோ இருந்தால், மற்ற தடுப்பூசிகளை ஏற்றுக்கொள்ளாத ஒவ்வாமை இருந்தால், குறிப்பிட்ட சில மருந்துகளை ஏற்றுக்கொள்ளாத கடுமையான ஒவ்வாமை இருந்தால் நீங்கள் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாது.
மாறாக, இப்போதைக்கு கொவிட்-19 தடுப்பூசி போடுவதை ஒத்திப்போட்டு, ஒவ்வாமை தொடர்பிலான மருத்துவ நிபுணரின் ஆலோசனையைப் பெற்றுள்ள தகுதிநிலையை உறுதிப்படுத்திக்கொள்ளலாம் என்று சுகாதார அமைச்சு கூறுகிறது.
கேள்வி: ஃபைசர்-பயோஎன்டெக் அல்லது மொடர்னா தடுப்பூசியை முதல் முறையாக போட்டுக்கொண்ட பிறகு, எனக்கு ஒவ்வாமை ஏற்பட்டால், எனக்கு இரண்டாவது முறையாக அந்தத் தடுப்பூசி போடப்படுமா?
பதில்: இல்லை. 'எம்ஆர்என்ஏ' சார்ந்த கொவிட்-19 தடுப்பூசியை முதல் முறையாக பெற்றுக்கொண்ட பிறகு ஒவ்வாமை ஏற்பட்டால், இரண்டாவது முறையாக போட்டுக்கொள்ளக்கூடாது. முதல் முறை தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட பிறகு 'அனாபிலாக்ஸிஸ்' ஒவ்வாமை ஏற்படுவோரும் அதில் அடங்குவர்.
ஏழு நாட்களுக்குப் பிறகு, 'உர்ட்டிகாரியா' எனும் அரிக்கும் தடிப்புகள் கொண்ட தோல் வியாதி அல்லது 'எஞ்சியோடீமா' எனும் தோல் வியாதி ஏற்பட்டவர்களுக்கும் இரண்டாவது முறையாகத் தடுப்பூசி போடப்படாது.
கேள்வி: எந்த வகை புற்றுநோயாளிகளுக்கு ஃபைசர்-பயோஎன்டெக் அல்லது மொடர்னா தடுப்பூசி போடலாம்?
பதில்: கீமோதெரபி, ரேடியோ தெரபி அல்லது இமுனோதெரபி சிகிச்சை பெற்றுக்கொள்ளாத புற்று நோயாளிகள் கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.
கடந்த மூன்று மாதங்களில் எவ்வித புற்றுநோய் தொடர்பான சிகிச்சைக்குச் செல்லாதோரும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு எவ்வித சிகிச்சைக்கும் செல்லத் திட்டமில்லாதோரும் கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.
புற்றுநோய் ஹார்மோனல் தெரபி சிகிச்சை பெற்றுக்கொள்பவர்கள் அல்லது புற்றுநோயால் முன்பு பாதிக்கப்பட்டு, குணமாகி வருபவர்கள் ஆகியோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று விளக்கப்பட்டது.