தமது காதலி மீது வெறுப்படைந்து அவரைத் தாக்கிய குற்றத்தை ஆடவர் ஒருவர் ஒப்புக்கொண்டார். ஜோஷுவா இங் வெய்ஜீ, 30, எனப்படும் அவர் தற்போது 54 வயதாகும் அந்தப் பெண்ணை சாமுராய் வாளால் மிரட்டிய குற்றத்தையும் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்தப் பெண்ணின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
காதலி வாடகைக்கு எடுத்திருந்த கொண்டோமினிய வீட்டில் 2017ஆம் ஆண்டு முதல் இருவரும் வசித்து வந்ததாகவும் கடந்த ஆண்டு ஜனவரி, மார்ச் மாதங்களில் இருவருக்கும் இடையில் வாக்குவாதங்கள் ஏற்பட்டதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார். அப்போது அப்பெண்ணை ஆடவர் தாக்கினார். ஆடவருக்காக கடன்முதலையிடம் அந்தப் பெண் $3,000 கடன் வாங்கிக் கொடுத்துள்ளார்.
அதனைத் திருப்பிச் செலுத்த நினைவூட்டியபோது பெண்ணின் முகத்தில் குத்தி ஆடவர் தாக்கினார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி பின்னிரவு 3 மணியளவில் அவ்விருவருக்கும் இடையில் மீண்டும் சச்சரவு ஏற்பட்டது.
மற்றொரு சம்பவத்தின்போது நாற்காலியில் உட்கார வைத்து அந்தப் பெண்ணை ஆடவர் கட்டி வைத்துள்ளார்.
அடித்து தாக்கிய குற்றங்களோடு போதைப் பொருள் உட்கொண்டது, உரிமம் இன்றி வாகனம் ஓட்டியது போன்ற குற்றங்களுக்காகவும் மூன்று ஆண்டு, ஐந்து மாத சிறைத் தண்டனையும் $2,100 அபராதமும் ஆடவருக்கு விதிக்கப்பட்டன.

