மின்னணு மற்றும் மின்னணு சாராத் துறைகளில் ஏற்றுமதி அதிகரித்ததை அடுத்து, சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதி சென்ற ஆண்டின் பிப்ரவரி மாதத்தை ஒப்புநோக்க இவ்வாண்டு பிப்ரவரியில் 4.2% வளர்ச்சி கண்டது.
அதே நேரத்தில், கடந்த ஜனவரியில் 12.7% ஏற்றம் கண்ட நிலையில், அதற்கடுத்த பிப்ரவரி மாதத்தில் எண்ணெய் சாரா ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் மெதுவடைந்ததாக 'என்டர்பிரைஸ் சிங்கப்பூர்' அமைப்பு நேற்று வெளியிட்ட தரவுகள் கூறின.
முன்னதாக, புளூம்பெர்க் கருத்தாய்வில் பங்குபெற்ற பகுப்பாய்வாளர்கள் 2021 பிப்ரவரியில் எண்ணெய் சாரா ஏற்றுமதி 6.1% வளர்ச்சி காணும் எனக் கணித்து இருந்தனர்.
ஆண்டு அடிப்படையில், இந்த ஆண்டு ஜனவரியில் 13.5% வளர்ச்சியடைந்த மின்னணுச் சாதனங்கள் ஏற்றுமதி, பிப்ரவரியில் 7.4 விழுக்காடாகப் பதிவானது. கணினி ஏற்றுமதி அதிகரிப்பு இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்பட்டது.
2021 ஜனவரியில் 12.5 விழுக்காடாக இருந்த மின்னணு சாராப் பொருள்களின் ஏற்றுமதி, பிப்ரவரியில் 3.3% எனப் பதிவானது.
மாத அடிப்படையில் பார்க்கையில், இவ்வாண்டு ஜனவரி மாதம் 6.9 விழுக்காடாக இருந்த எண்ணெய் சாரா ஏற்றுமதி, பிப்ரவரியில் 8.2 விழுக்காடாக ஏற்றம் கண்டது. அதாவது, ஜனவரியில் $15.4 பில்லியனாக இருந்த அந்த ஏற்றுமதி, அதற்கடுத்த மாதத்தில் $16.7 பில்லியனாக உயர்ந்தது.
இதனிடையே, சென்ற மாதத்தில் எண்ணெய் சார்ந்த ஏற்றுமதி 28% வீழ்ச்சியடைந்தது. ஐரோப்பிய ஒன்றியம், ஹாங்காங், மலேசியா ஆகிய பகுதிகளுக்கான எண்ணெய் சார்ந்த பொருள்கள் ஏற்றுமதி குறைவாக இருந்ததே இதற்குக் காரணம்.
ஆண்டு அடிப்படையில், ஜனவரியில் 1.9% சரிவு கண்ட மொத்த வர்த்தகம், பிப்ரவரியில் 3.3% இறக்கம் கண்டது. மொத்த ஏற்றுமதி 2 விழுக்காடும் மொத்த இறக்குமதி 4.6 விழுக்காடும் சரிவைச் சந்தித்தன.
ஆயினும், மாத அடிப்படையில் பார்க்கும்போது, கடந்த மாதத்தில் மொத்த வர்த்தகம் 6% கூடியது. முந்திய ஜனவரி மாதத்தில் இந்த உயர்வு 5.7 விழுக்காடாக இருந்தது. ஜனவரியில் $86.6 பில்லியனாக இருந்த மொத்த வர்த்தகம், பிப்ரவரியில் $91.8 பில்லியனை எட்டியது. அதேபோல, பிப்ரவரி மாதத்தில் மொத்த ஏற்றுமதி 6.3 விழுக்காடும் மொத்த இறக்குமதி 5.7 விழுக்காடும் அதிகரித்தன.

