உறைய வைத்து உலர்த்தப்பட்ட கொவிட்-19 பல்படியத் தொடர்வினை (பிசிஆர்) பரிசோதனைக் கருவிகள், சேமிப்பு மற்றும் போக்குவரத்துத் தேவைகளை எளிதாக்கும் எனக் கூறப்படுகிறது.
'லயோஃபிலைசேஷன்' என அழைக்கப்படும் அம்முறையால், இனி 'பிசிஆர்' பரிசோதனைக் கருவிகளைக் குளிரூட்டத் தேவை இராது என்று 'பயோஅக்யுமென் குளோபல்' எனும் உள்ளூர் உயிர்தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்தது.
அந்நிறுவனத்தின் புதிய 'லயோஃபிலைசேஷன்' ஆய்வகம் அதிகாரபூர்வமாக நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.
உறைய வைத்து உலர்த்தப்பட்ட பரிசோதனைக் கருவிகளை அறை வெப்பநிலையிலேயே தரம் கெடாமல் வைத்திருக்கலாம்.
நாளொன்றுக்கு 2,400 பிசிஆர் பரிசோதனைக் கருவிகளை உறைய வைத்து உலர்த்தும் கொள்திறனைக் கொண்டுள்ள அந்த ஆய்வகம். விரைவில் அதனை இரட்டிப்பாக்க இருக்கிறது.
அத்துடன், நாளொன்றுக்கு 20,000 'ஈர' கொவிட்-19 பிசிஆர் பரிசோதனைக் கருவிகளை அந்நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்பொழுது, உறைய வைத்து உலர்த்தப்பட்ட பிசிஆர் பரிசோதனைக் கருவிகளை அந்நிறுவனம் உருவாக்கி வருகிறது. இன்னும் இரு மாதங்களில் அவை தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போதைக்கு, பூஜ்ஜியம் டிகிரி செல்சியசுக்கும் குறைவான வெப்பநிலையில் கொவிட்-19 பிசிஆர் பரிசோதனைக் கருவிகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. உறைய வைத்து உலர்த்தப்பட்ட பரிசோதனைக் கருவிகள் வந்தபின் அவற்றை இயல்பான வெப்பநிலையிலேயே எடுத்துச் செல்லவும் ஆறு மாதங்கள் வரை சேமித்து வைக்கவும் முடியும்.

