எல்லாப் பிரிவுகளிலும் சிஓஇ கூடியது
அண்மைய ஏலக்குத்தகையில் அனைத்துப் பிரிவுகளிலும் வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணம் ஏற்றம் கண்டது. இரு வாரங்களுக்கு முந்திய ஏலக்குத்தகையில் $41,996 என முடிந்த 1,600 சிசி வரைப்பட்ட கார்களுக்கான சிஓஇ கட்டணம், நேற்றைய ஏலக்குத்தகையில் $44,589ஆக அதிகரித்தது. 1,600 சிசிக்கு மேற்பட்ட கார்களுக்கான கட்டணம் $45,001லிருந்து $2,000 கூடி, $47,001ஆக முடிவடைந்தது. மோட்டார்சைக்கிள் தவிர்த்த மற்ற அனைத்து வாகனங்களுக்கும் பயன்படுத்தக்கூடிய பொதுப் பிரிவு சிஓஇ கட்டணம், $47,001லிருந்து $47,806 ஆக உயர்ந்தது. முந்திய ஏலக்குத்தகையில் 3,000 வெள்ளிக்கும் மேல் இறக்கம் கண்ட வணிகப் பிரிவு வாகனங்களுக்கான சிஓஇ கட்டணமும் இம்முறை கூடியது. கடந்த இரு வாரங்களாக $37,513ஆக இருந்த அக்கட்டணம், அடுத்த இரு வாரங்களுக்கு $39,589ஆக இருக்கும். மோட்டார்சைக்கிளுக்கான சிஓஇ கட்டணம் $7,752லிருந்து $7,791 எனச் சற்றே அதிகரித்தது.
கொவிட்-19 சோதனை முடிவு: 'ஸ்கூட்' மின்னிலக்க முறையில் சரிபார்ப்பு
மலிவுக் கட்டண விமான சேவை நிறுவனமான 'ஸ்கூட்', கொவிட்-19 பரிசோதனை முடிவுகளை மின்னிலக்க முறையில் சரிபார்க்கும் முன்னோட்டத் திட்டத்தை அறிமுகப் படுத்தியிருக்கிறது.
சிங்கப்பூர், இந்தோனீசியா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து கிளம்பும் விமானங்களில் பயணம் செய்வோர், பயணத்திற்கு முந்திய கொவிட்-19 பரிசோதனைக்கு முன்பதிவு செய்ய ஏதுவாக இணையவாயில் ஒன்றையும் அந்நிறுவனம் முன்னோட்ட முறையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 'ஸ்கூட்' இணையத்தளம் அல்லது கைபேசிச் செயலி வாயிலாக அந்த இணையவாயிலை அணுகலாம். அந்த இணையவாயில், 'ஸ்கூட்' நிறுவனத்துடன் பங்காளித்துவம் செய்துகொண்டு உள்ள, அங்கீகாரம் பெற்ற கொவிட்-19 பரிசோதனை மருந்தகங்களுடன் வாடிக்கையாளர்களை இணைக்கும். அதன்மூலம் அவர்கள் பரிசோதனைக்கான பணத்தைச் செலுத்தவும் 36 மணி நேரத்திற்குள் ஒரு மின்னிலக்கச் சான்றிதழைப் பெறவும் முடியும். அந்த இணையவாயில் வாயிலாகப் பெறப்படும் கொவிட்-19 பரிசோதனை முடிவுகளில் விரைவுப் பரிசோதனைக் குறியீடு (கியூஆர்) இடம்பெற்றிருக்கும். அதனைக் கொண்டு, பின்னர் தெமாசெக் நிறுவனம் தொடங்கிய 'அஃபினிடி' செயலி மூலம் பரிசோதனை முடிவு சரிபார்க்கப்படும்.
பினாங்கு மற்றும் சுரபாயாவில் இருந்து சிங்கப்பூர் வந்த விமானங்களில் இந்நடைமுறை சோதித்துப் பார்க்கப் பட்டதாக 'ஸ்கூட்' நிறுவனம் தெரிவித்தது. அதன் தாய் நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இவ்விரண்டு திட்டங்களையும் ஏற்கெனவே வெள்ளோட்டம் விட்டுள்ளது.

