சிங்கப்பூரில், அடுத்த இரு வாரங்களுக்கு இடியுடன் கூடிய மழையை அதிகமாக எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளது.
மார்ச் மாதத்தின் பெரும்பாலான நாள்களில், தீவின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கன மழை வரை எதிர்பார்க்கலாம். பெரும்பாலும் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. சில நாள்களில் மாலை வரை மழை நீடிக்கலாம். எனினும், ஒட்டுமொத்த மழையின் அளவு, தீவின் பெரும்பாலான பகுதிகளில் சாதாரணமாக இருக்கும்.
அதேநேரத்தில், பெரும்பாலான நாள்களில் வெப்பநிலை 24 டிகிரி செல்சியசுக்கும் 33 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும். சில நாட்களில் வெப்பநிலை 34 டிகிரிக்கு உயரலாம்.
இம்மாதத்தின் முதல் இரு வாரங்களைப் போல, அடுத்த இருவாரங்கள் வெப்பமாக இருக்காது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த இருவாரங்களில் வெப்பநிலை சராசரியாக 34 டிரிசி செல்சியசாக இருந்தது.
மார்ச் 2ஆம் தேதி ஆக அதிகமாக 35.6 டிகிரி செல்சியசுக்கு உயர்ந்தது. மார்ச் 8ஆம் தேதி குளிர்ந்த நாளாக 21.4 டிகிரி வெப்பநிலையுடன் இருந்தது.

