அழகு பராமரிப்பு தொகுப்புகள் மூலம்
$630,000 கையாடியவருக்குச் சிறை
உடல் எடை இளைப்பு நிறுவனம், தோல் பராமரிப்பு நிறுவனம் ஆகிய இரண்டு இடங்களிலும் வேலை செய்த ஓங் சியொக் யோங், போலி அழகு பராமரிப்புத் தொகுப்புகளைத் தாமே உருவாக்கி 24 பேரிடமிருந்து 630,000 வெள்ளிக்கும் மேற்பட்ட தொகையை மோசடியாகப் பெற்றுக்கொண்டார். இருப்பினும், இரண்டு நிறுவனங்களாலும் வழங்கப்படாத தொகுப்புகள் இவை என்று கூறப்பட்டது. இதன் தொடர்பில் 35 வயது ஓங்குக்கு நேற்று நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2016க்கும் 2019க்கும் இடைப்பட்ட காலத்தில், தனக்கு நன்கு பரிச்சயமான வாடிக்கையாளர்களை ஓங் குறிவைத்துத் தனது தொகுப்புகளை அறிமுகப்படுத்தி இம்மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
மகளின் நண்பனிடம் தகாத முறையில் நடந்துகொண்டவருக்குச் சிறை
மிதமான அறிவுத்திறன் குறைபாடுள்ள 15 வயது சிறுவனிடம், பாலியல் ரீதியாக 45 வயது மாது ஒருவர் தகாத முறையில் நடந்துகொண்டார். சிறுவன் தன் பிரச்சினைகளைப் பற்றி வாட்ஸ்அப் உரையாடல் மூலம் அந்த மாதிடம் கூற, மாது அச்சிறுவனுக்கு ஆறுதல் கூறினார். சிறுவன் தன் மகளுடைய காதலன் ஆக விரும்புவதை அறிந்து வீட்டுக்கும் அழைத்தார் மாது. தன்னுடைய மகளும் அச்சிறுவனும் பாலியல் ரீதியாகச் செய்யும் செயல்களைப் பார்த்தும் வந்தார் அவர். பின்னர் தானும் சிறுவனுடன் பாலியல் ரீதியான செயலில் ஈடுபட்டார். தனக்கு நடந்தது குறித்து சிறுவன் பள்ளிச் சமூகச் சேவையாளர் ஒருவரிடம் தெரிவித்தார். போலிசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. குற்றம் புரிந்தவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மீன் வளர்ப்புக்குத் தென்பகுதி
நீரிணையை பயன்படுத்தும் சாத்தியம்
உணவு உற்பத்தியை உள்ளூரிலேயே செய்யும் திட்டங்களை முடுக்கிவிடுவதற்கு இடையே, சிங்கப்பூரின் தென்பகுதி நீரிணையில் மீன் வளர்ப்பை வர்த்தக ரீதியாகச் செய்யும் சாத்தியத்தை அரசாங்கம் மதிப்பிட்டு வருகிறது. நீரிணைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம், மீன் வளர்ப்புக்கு நீரிணை ஏற்புடையதா என்பது குறித்து ஆராயப்படுகிறது. இந்த ஆய்வு இவ்வாண்டு இறுதிக்குள் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்ப்பதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது சிங்கப்பூரில் 110 கடல் சார்ந்த மீன் பண்ணைகள் உள்ளன. இவற்றில் ஜோகூர் நீரிணையில் அமைந்தவை 108. எஞ்சிய இரு ஆழ்கடல் பண்ணைகளும் தென் நீரிணைகளில் உள்ளன.

