ஒருவரது உண்மையான அடையாளம் அறியப்படாத நிலையிலும், அவர் ஒப்படைக்கும் பணம், சொத்து ஆகியவற்றைப் பிறர் கையாடினால் அது குற்றவியல் நம்பிக்கை மோசடியே என்று உயர் நீதிமன்றம் நேற்று தெளிவுப்படுத்தியது.
மின்னஞ்சல் மூலம் ராஜ் குமார் பிரிசா பேஸ்நாத் என்பவருடன் 'மரியா லொய்ட்' என்ற அடையாளமுடைய ஒருவர் 2012ல் உரையாடத் தொடங்கினார்.
தன்னைச் சந்திக்க சிங்கப்பூர் வருவதாகக் கூறி அந்த பெண் பணம் கேட்க, ராஜ் குமாரும் $1,200 பணம் அனுப்பினார். ஆனால் அவர் சிங்கப்பூர் வரவில்லை.
பின்னர், ஒரு குறிப்பிட்ட தொகையை ராஜ் குமார் பெற்றுக்கொண்டு மலேசியாவுக்கு வருமாறு மரியா கேட்டுக்கொண்டார்.
அதனால், 2013ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதியன்று ஆயிரம் வெள்ளி நோட்டுகளாக இருந்த $81,000ஐக் கொண்ட உறையை ராஜ் குமார் இடைத்தரகரான திருவாட்டி மெலடி சூங்கிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
திருவாட்டி சூங் அதே உறையை திரு சீ மின் ஜியோங் என்பவரிடமிருந்து பெற்றுக்கொண்டார். திரு சீயின் வங்கிக் கணக்கில் அத்தொகை போடப்பட்டதாகக் கூறப்பட்டது. இருப்பினும், ராஜ் குமார் பணத்தை மலேசியாவுக்குக் கொண்டு செல்லவில்லை.
பணத்தை அனுப்பியவருக்கு திரு சீ பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று வங்கி திரு சீயிடம் தெரிவித்ததை அடுத்து, அவர் போலிஸ் புகார் செய்தார்.
இதற்காக ராஜ் குமாருக்கு 13 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இதன் தொடர்பில் மேல்முறையீடு செய்த ராஜ் குமாரின் வழக்கறிஞர், ராஜ் குமார் உட்பட சிலரை ஏமாற்றக் கற்பனையாக உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் ஒன்று இவ்வாறு இணையம் வழி ஏமாற்றியதால், எவ்விதக் குற்றவியல் நம்பிக்கை மோசடியும் நடக்கவில்லை என்று வாதாடினார்.
இருப்பினும், அவரின் வாதத்தை நிராகரித்தார் நீதிபதி.
மரியாவின் உண்மையான அடையாளம் அறியப்படாவிட்டாலும் பணம் ராஜ் குமார் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டதாகவும் மரியா கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப ராஜ் குமார் பணத்தைக் கையாண்டிருக்க வேண்டும் என்பதாகவும் நீதிபதி விளக்கினார்.
பணத்தை ராஜ் குமார் வைத்துக்கொண்டது கையாடலே என்றார் அவர்.