முதலாளிகளுக்கு தலைமை சுகாதார விஞ்ஞானி வலியுறுத்து
முதலாளிகளுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும்போது அவர்கள் அதைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தங்களது ஊழியர்களையும் சக பணியாளர்களையும் அவர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் சிங்கப்பூரின் தலைமை சுகாதார விஞ்ஞானியான பேராசிரியர் டான் சோர் சுவான் கூறியுள்ளார்.
சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம் நேற்று ஏற்பாடு செய்த இணையக் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
மூத்த நிர்வாகத்தினர், மனிதவள இயக்குநர்கள், மேலாளர்கள் ஆகிய தரப்பினரை இலக்காகக் கொண்ட இந்தக் கருத்தரங்கில் வர்த்தகச் செயல்பாடுகளில் கொவிட்-19 தடுப்பூசித் திட்டம் ஏற்படுத்தும் தாக்கம், கொள்ளைநோய் பரவும் சூழலில் நிறுவனங்கள் எவ்வாறு தொடர்ந்து தங்களது செயல்பாடுகளை நிர்வகிக்கலாம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டன.
சிங்கப்பூரில் அவசரகாலப் பயன்பாட்டிற்கு ஒப்புதல் பெற்ற 'ஃபைசர்-பயோஎன்டெக்', 'மொடர்னா' தடுப்பூசிகள் குறித்துப் பேசிய பேராசிரியர் டான், அவை செயல்திறன்மிக்கவை, பாதுகாப்பானவை என்பதைச் சுட்டினார்.
கூட்டு நோய் எதிர்ப்புச் சக்தி எப்படி ஏற்படுத்தப்படுகிறது என்பது பற்றியும் பேராசிரியர் டான் விளக்கினார். அதாவது, மக்கள்தொகையில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டால் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாதவர்களும் பாதுகாக்கப்படுவதாக அவர் சொன்னார்.
எனினும், வேகமாகப் பரவும் புதுவகை கொரோனா கிருமியால் பொதுச் சுகாதாரக் கட்டுப்பாடும் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் செயல்திறனும் பாதிக்கப்படக்கூடும் என்பதால் மேலும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று பேராசிரியர் டான் வலியுறுத்தினார்.
"நாம் வாழும், வேலை செய்யும் முறையில் வழக்கநிலைக்குத் திரும்ப தடுப்பூசி உதவுகிறது. என்றாலும், இலக்கை எட்டுவதில் பயணம் எளிதாக இருக்கும் என நாம் எதிர்பார்க்கக்கூடாது. இறுதிக்கட்டத்தில் பல திடீர் திருப்பங்கள் ஏற்படும். அவற்றுக்கு ஏற்றாற்போல் நம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்," என்று அவர் அறிவுறுத்தினார்.
நிறுவன ஊழியர்கள் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள அவர்களது முதலாளிகள் எவ்வாற்று ஊக்கமளிக்கலாம், தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியர்கள், அதைப் போட்டுக்கொள்ளாத ஊழியர்கள் என ஊழியர்களை இருவிதமாக வர்த்தகங்கள் பிரித்துப் பார்க்கலாமா என்பது குறித்தும் அந்தக் கருத்தரங்கில் உரையாடப்பட்டது.

