'கட்டுப்பாடுகளை தளர்த்த காலம் இன்னும் கனியவில்லை'

'கட்டுப்பாடுகளை தளர்த்த காலம் இன்னும் கனியவில்லை'

2 mins read

சிங்­கப்­பூ­ரில் சென்ற மாதம் சீனப் புத்­தாண்­டின்­போது அதிக கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டன. இதன் கார­ண­மாக அந்த விழாக்­கா­லத்­தில் கொவிட்-19 கிரு­மிப் பர­வல் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டது.

இருந்­தா­லும், கட்­டுப்­பா­டு­களைத் தளர்த்த காலம் இன்­ன­மும் கனி­ய­வில்லை என்­றும் பொது­மக்­கள் தொடந்து விழிப்­பு­டன் இருந்து வர­வேண்­டும் என்­றும் வல்­லு­நர்­கள் வலி­யு­றுத்தி இருக்­கி­றார்­கள்.

சீனப் புத்­தாண்டு விடு­முறை நாட்­க­ளான பிப்­ர­வரி 12, 13ஆம் தேதி­க­ளுக்கு முன்­ன­தாக கொவிட்-19 சிறப்­புப் பணிக்­குழு பல கட்­டுப்­பா­டு­களை விதித்­தது.

அந்­தச் சிறப்­புப் பணிக்­கு­ழு­வின் தலை­வர்­களில் ஒரு­வ­ரான கல்வி அமைச்­சர் லாரன்ஸ் வோங், சூழ்­நிலை மேம்­பட்டு இருந்­தா­லும் கட்­டுப்­பா­டு­கள் தொடர்ந்து நடப்­பில் இருந்து வரும் என்று பிப்­ர­வரி மாதம் 19ஆம் தேதி கூறி­ இருந்­தார்.

விழாக்­கா­லம் முடிந்த பிற­கும் தொடர்ந்து ஒரு சில வாரங்­க­ளுக்கு சூழ்­நி­லையை அதி­கா­ரி­கள் கண்­கா­ணித்து வரு­வார்­கள் என்­றும் அமைச்­சர் கூறியி­ருந்­தார்.

கடந்த மாதத்­தில் சமூ­கத்­தொற்று குறை­வா­கவே இருந்து வந்­தது. மார்ச் 3க்குப் பிறகு வாரம் ஒன்­றுக்கு ஏறத்­தாழ புதி­தாக இரண்டு பேர் சமூ­கத்­தொற்­றுக்கு ஆளாகி வந்­தி­ருக்­கி­றார்­கள்.

மேம்­ப­டுத்­தப்­பட்ட கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக இரண்டு விதத்­தில் நன்­மை­கள் ஏற்­பட்டு இருக்­கின்­றன.

பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் மொத்த எண்­ணிக்கை குறை­வாக இருக்­கிறது. சென்ற மாதம் புதி­தாக கிருமி தொற்­றி­யோ­ரில் பெரும்­பா­லா­ன­வர்­கள் வெளி­நா­டு­களில் இருந்து இங்கு வந்­த­வர்­கள்.

அதே­வே­ளை­யில், கொவிட்-19 கிருமி இன்­ன­மும் ஒழி­ய­வில்லை. இருந்­தா­லும் சிங்­கப்­பூர் நில­வ­ரம் சமா­ளிக்­கத்­தக்க அள­வில் இருக்­கிறது என்­பது தெரி­ய­வந்­துள்­ள­தாக வல்­லு­நர்­கள் கூறு­கி­றார்­கள்.

இம்­மா­தம் 15 நில­வ­ரப்­படி சிங்­கப்­பூ­ரில் 549,000க்கும் மேற்­பட்­டோர் முத­லா­வது தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்டு இருக்­கி­றார்­கள். அவர்­களில் 243,000 பேர் இரண்­டா­வது ஊசி­யை­யும் போட்டுக்­கொண்­டுள்­ள­னர்.

மக்­கள்­தொகை­யில் ஏறத்­தாழ 4 விழுக்­காட்­டி­னர் தடுப்­பூ­சியை இரு­முறை போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.