இருதரப்பு பயண ஏற்பாடு: சிங்கப்பூர்-தைவான் பேச்சு

இருதரப்பு பயண ஏற்பாடு: சிங்கப்பூர்-தைவான் பேச்சு

2 mins read

தற்­போ­தைய கொவிட்-19 சூழ­லில் மற்ற நாடு­க­ளு­டன் தைவான் இரு­த­ரப்பு பயண ஏற்­பா­டு­க­ளைச் செய்­து­கொள்ள விரும்­பும் பட்­டி­ய­லில் அடுத்­த­தாக சிங்­கப்­பூர் உள்­ளது என தைவா­னிய சுகா­தார அமைச்­சர் தெரி­வித்­துள்­ளார்.

பசி­பிக் பெருங்­க­ட­லில் அமைந்­துள்ள பலாவ் தீவு­டன் இரு­த­ரப்பு பயண ஏற்­பாட்டை தைவான் நேற்று முன்­தி­னம் செய்­து­கொண்­டது. அதை­ய­டுத்து சிங்­கப்­பூ­ரு­டன் இது­கு­றித்து பேச்­சு­வார்த்தை நடந்து வரு­வ­தாக தைவான் நேற்று தெரி­வித்­தது.

தைவா­னில் இருந்து சிங்­கப்­பூர் வரும் பய­ணி­க­ளுக்கு கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­ப­டு­வ­தாக கடந்த டிசம்­பர் மாதம் சிங்­கப்­பூர் அறி­வித்­தி­ருந்­தது.

அதன் ஒரு பகு­தி­யாக, சிங்­கப்­பூர் வந்­த­வு­டன் இரு வார கட்­டாய தனிமை உத்­த­ரவை நிறை­வேற்­று­வ­தி­லி­ருந்து பய­ணி­க­ளுக்கு விலக்கு அளிக்­கப்­பட்­டது. சிங்­கப்­பூர் வந்­தி­றங்­கி­ய­வு­டன் அவர்­கள் கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கொண்­டால் போதும்.

சிங்­கப்­பூர் தரப்­பில் கட்­டுப்­பாடுகள் தளர்த்­தப்­பட்­டுள்­ள­தால் தைவான் தரப்­பி­லும் தளர்­வு­களை சிங்­கப்­பூர் எதிர்­பார்த்­துள்­ள­தால் இரு நாடு­க­ளுக்கு இடை­யில் பயண ஏற்­பா­டு­கள் குறித்த பேச்­சு­வார்த்தை தொடங்­கி­யுள்­ள­தாக தைவா­னிய சுகா­தார அமைச்­சர் சென் சி சுங் நேற்று கூறி­னார்.

தைவா­னு­டன் இரு­த­ரப்பு பயண ஏற்­பா­டு­க­ளைத் தொடங்­கு­வ­தற்­கான சாத்­தி­யம் குறித்து ஜப்­பான், தென்­கொ­ரியா, வியட்­னாம் ஆகிய நாடு­கள் பேச்­சு­வார்த்தை நடத்தி வந்­தா­லும், இந்த விவகாரத்தில் சிங்­கப்­பூர் மும்­மு­ரம் காட்டி வரு­வதாக தைவா­னிய போக்­கு­வ­ரத்து அமைச்­சர் லின் சியா லுங் சொன்­னார்.

பயண ஏற்­பா­டு­கள் குறித்த விவ­ரங்­கள் இன்­னும் பேசப்­பட்டு வரு­வ­தால் இது­கு­றித்த மேல்­வி­ரங்­களை வெளி­யிட திரு லின் மறுத்­து­விட்­டார்.

இந்­நி­லை­யில், பலாவ் தீவு­ உடனான இரு­த­ரப்பு பயண ஏற்­பாடு ஏப்­ரல் 1ஆம் தேதி தொடங்­கும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதன் மூலம் இரு விமா­னங்­களில் தலா 110 பய­ணி­கள் பலாவ் தீவுக்­குச் செல்ல அனு­மதிக்­கப்­படு­வர்.

"பலா­வில் தொடர்ந்து கொவிட்-19 சம்­ப­வம் எது­வும் பதி­வா­கா­த­தால் அத்­தீ­வு­டன் பயண ஏற்­பாட்­டைத் தொடங்க தைவான் முடிவு செய்­துள்­ளது," என்று திரு சென் விவ­ரித்­தார்.