மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆக அதிக அளவில் ஏறத்தாழ 20.5 கிலோ கஞ்சாவைக் கைப்பற்றி உள்ளது.
அந்தப் பிரிவின் அதிகாரிகள் மார்ச் 16ஆம் தேதி தொடங்கி இரண்டு நாட்களில் எடுத்த நடவடிக்கையில் ஏறத்தாழ 8.3 கிலோ ஹெராயின்; ஏறக்குறைய 6.4 கிலோ ஐஸ்; 1,091 எக்ஸ்டசி மாத்திரைகள்; ஏறக்குறைய 1,000 எரிமின்-5 மாத்திரைகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட மொத்த போதைப் பொருளின் மதிப்பு $1.7 மில்லியன். அவை 3,950 ஹெராயின் புழங்கிகள், 3,700 ஐஸ் புழங்கிகள், 2,930 கஞ்சா பித்தர்கள் ஆகியோருக்கு ஒரு வார காலத்துக்குப் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த அளவுக்கு ஆக அதிகமாக போதைப்பொருள் சிக்கியதில்லை. 14 ஆண்டுகளுக்கு முன்அந்த ஆண்டில் ஏறத்தாழ 20.6 கிலோ கஞ்சா சிக்கியது.
அதிகாரிகள் இப்போது இரண்டு நாட்கள் மேற்கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு வேட்டையில் 27 முதல் 33 வரை வயதுள்ள மூன்று சிங்கப்பூரர்கள் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களில் அவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று அதிகாரிகள் சந்தேகப்படுகிறார்கள்.
கெம்பாஸ் ரோடு அருகே ஒரு காரை அதிகாரிகள் சோதனையிட்டதை அடுத்து இரண்டு பேர் பிடிபட்டனர். அவர்கள் வந்த காரில் மொத்தம் 20 போதைப்பொருள் பொட்டலங்கள் இருந்தன. அவற்றில் ஏறத்தாழ 419 கிராம் ஐஸ், 87 எக்ஸ்டசி மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
முதலில் கைதான இருவரில் ஒருவரான 33 வயது ஆடவரை மெக்நாயர் ரோட்டில் இருக்கும் அவரின் வீட்டுக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர்.
அங்கு ஏறத்தாழ 8.3 கிலோ ஹெராயின் இருந்த 19 பொட்டலங்கள், ஏறக்குறைய 5 கிலோ இருந்த 20 ஐஸ் போதைப்பொருள் பொட்டலங்கள், 20.5 கிலோ கஞ்சா இருந்த 20 பொட்டலங்கள், 1,000 எக்ஸ்டசி மாத்திரைகள், 100 எரிமின்-5 மாத்திரைகள் சிக்கின.
அதே நாளன்று மாலையில், அதே மெக்நாயர் ரோடு வீடு அருகே ஒரு மோட்டார்சைக்கிளில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அந்த வாகனம் முதலில் பிடிபட்டவர்களில் இரண்டாவது நபரான 27 வயது ஆடவருக்குச் சொந்தமானது.
அடுத்த நாளில் 30 வயதுள்ள மூன்றாவது ஆடவர் சிக்கினார்.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தொடர்ந்து புலன்விசாரணை நடத்தி வருகிறது.
500 கிராமுக்கும் அதிகமான கஞ்சாவைக் கடத்துவோருக்குப் போதைப்பொருள் தவறான பயன்பாட்டுச் சட்டத்தின்படி, மரண தண்டனை விதிக்க முடியும்.

