கொவிட்-19 மற்றும் பொருளியல் மந்த சூழலில், சிங்கப்பூரில் நான்கு முக்கிய தூண்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது. அரசாங்கம், நிறுவனங்கள், அனைத்து ஊடகம் மற்றும் அரசு சாரா அமைப்புகள் ஆகிய நான்கின் மீதான பொதுமக்களின் ஒட்டுமொத்த நம்பிக்கை முந்தைய ஆண்டைவிட ஆறு புள்ளிகள் அதிகமாகி 10 ஆண்டுகளில் இல்லாதபடி 68 விழுக்காட்டை எட்டியது.
'இடெல்மென் டிரஸ்ட் பாரோ மீட்டர் 2021' அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. சிங்கப்பூரைப் பற்றிய அந்த அறிக்கையில் இந்த நன்னம்பிக்கை தெரியவந்துள்ளது. அரசாங்கத்தின் மீது ஆக அதிகமாக 76 விழுக்காடு நம்பிக்கை நிலவுகிறது. இது சென்ற ஆண்டு 70 விழுக்காடாக இருந்தது.
அரசு சாரா அமைப்புகள் (70%), நிறுவனங்கள் (65%), ஊடகம் (62%) ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பெறுகின்றன.
அந்த அறிக்கை சிங்கப்பூரர்கள் பலரையும் உள்ளடக்கப்பட்டு நடத்தப்பட்ட ஆய்வு அடிப்படையில் உருவாக்கப்பட்டு உள்ளது. ஆய்வில் கலந்துகொண்ட சிங்கப்பூரர்களில் 18 விழுக்காட்டினர் மட்டுமே செய்தி களுடன் இடைவிடாமல் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு பல்வேறு கண்ணோட்டங்களுடன் நல்ல தகவல் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கிறார்கள் என்பது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
அவர்கள் செய்திகளை சரிபார்க்கிறார்கள். சரிபார்க்கப்படாத தகவல்களை அவர்கள் பரப்புவதில்லை.
தங்களுக்கு ஆர்வமாக உள்ள செய்திகளைப் பகிர்ந்துகொள்ள அல்லது வேறு யாருக்கும் அனுப்ப 60 விழுக்காட்டினர் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
அந்த ஆய்வில் 1,150 சிங்கப்பூரர்கள் கலந்துகொண்டார்கள். இடெல்மென் நிறுவனம் 28 நாடுகளில் 18 மற்றும் அதற்கும் அதிக வயதுள்ள 33,000 மக்களை உள்ளடக்கி பரந்த அடிப்படையில் ஆய்வை நடத்தியது. அதன் ஒரு பகுதியாக சிங்கப்பூர் அறிக்கை வெளியிடப்பட்டது.
சிங்கப்பூர் 68% நம்பிக்கை அளவுடன், இந்தியா (77), சீனா (72), இந்தோனீசியா (72), சவூதி அரேபியா (69) ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக ஐந்தாவது இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியா (59) போன்ற நாடுகள் பட்டியலில் நடுநிலை அளவில் இருக்கின்றன. அமெரிக்கா (48), பிரிட்டன் (45) ஆகிய நாடுகள் ஆய்வில் கலந்துகொண்டவர்களைப் பொறுத்தவரையில் நம்பிக்கை குறைவாக இருக்கின்றன.
சிங்கப்பூரில் ஆய்வில் கலந்துகொண்டவர்களிடையே ஆக அதிக நம்பிக்கையுடன் திகழ்வது அரசாங்கம்தான். 2012க்குப் பிறகு வழிவழியான ஊடகத்தின் மீதான நம்பிக்கை 60 விழுக்காட்டு அளவைவிட முதன்முதலாக இப்போதுதான் குறைந்து இருக்கிறது.
மின்னிலக்க செய்திகளுடன் ஒப்பிடும்போது வழிவழியான செய்தித்தாள் செய்திகள் சுடச்சுட புத்தம்புது தகவல்களைக் கொண்டிருக்கமாட்டா என்ற ஓர் எண்ணம் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று இந்த அறிக்கை பற்றிய குழு விவாதத்தில் கலந்துகொண்ட கொள்கை ஆய்வுக் கழகத்தின் சமூக மற்றும் கலாசாரத் துறைத் தலைவர் கரோல் சுன் கூறினார்.

