கடற்கொள்ளை மற்றும் ஆயுதபாணி கொள்ளைகளை ஒடுக்குவதற்கான முயற்சிகளை சிங்கப்பூர் மறுஉறுதிப்படுத்தியுள்ளது.
அதற்கான வட்டார ஒத்துழைப்பு உடன்பாட்டில் இடம்பெற்று இருக்கும் 20 தரப்புகளில் சிங்கப்பூரும் ஒன்று. அந்த உடன்பாட்டின் 15வது ஆண்டு கருத்தரங்கம் நேற்று மெய்நிகர் ரீதியில் நடந்தது. அதில் சிங்கப்பூர் கலந்துகொண்டது. அந்த உடன்பாட்டின் தகவல் பகிர்வு மையம் சிங்கப்பூரில் அமைந்துள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் அந்த உடன்பாடு காரணமாக ஏற்பட்ட சாதனைகளை கருத்தரங்கு அங்கீ கரித்தது. ஆசியாவில் கடற்கொள்ளைகளையும் ஆயுதபாணி கொள்ளைகளையும் ஒடுக்குவதற்குத் தொடர்ந்து முயலப்போவதாக உடன்பாட்டில் அங்கம் வகிக்கும் தரப்புகள் உறுதி கூறின.
போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் கருத்தரங்கில் வரவேற்புரை ஆற்றினார்.
மலாக்கா நீரிணை, சிங்கப்பூர் நீரிணை போன்ற உலக பொது அம்சங்களைப் பாதுகாக்கும் ஒட்டுமொத்த பொறுப்பு தங்களுக்கு இருக்கிறது என்பதை உலக சமூகம் மெய்ப்பிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
அந்த உடன்பாட்டின் தகவல் பகிர்வு மையம் பல ஆண்டு காலமாக மேம்பட்டு வந்திருக்கிறது.
அதில் சிங்கப்பூர் மும்முரமான பணி ஆற்றி வந்துள்ளது என்பதைக் குறிப்பிட்ட அமைச்சர், அந்த உடன்பாட்டில் அங்கம் வகிக்கும் தரப்புகளுடன் செயல்பட்டு அந்த மையத்திற்கு வலுவான ஆதரவு கிடைக்க முயலப்போவதாகவும் தெரிவித்தார்.
சிங்கப்பூர் அந்த உடன்பாட்டின் 15வது ஆளுமை மன்றக் கூட்டத்திலும் பங்கெடுத்துக்கொண்டது. அந்தக் கூட்டம் மார்ச் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் மெய்நிகர் ரீதியில் நடந்தது.
கடற்கொள்ளை மற்றும் ஆயுதபாணிக் கொள்ளைகளை ஒடுக்குவதற்கான வட்டார ஒத்துழைப்பு உடன்பாட்டின் தகவல் பகிர்வு மையத்தின் 2020ஆம் ஆண்டின் பணிகள் அந்தக் கூட்டத்தில் மறுபரிசீலனைக்கு இடம்பெற்றன.
இந்த ஆண்டிற்கும் எதிர்காலத்திற்கும் தேவைப்படும் உத்திகள் பற்றியும் செயல்திட்டங்கள் பற்றியும் அந்த மன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

