பொதுமக்கள் பலரின் நெஞ்சத்தில் நீங்கா இடம்பிடித்துள்ள சிங்கப்பூரின் தேசிய தின பாடல்களில் ஒன்றான 'கவுண்ட் ஆன் மி சிங்கப்பூர்' இப்போது பதிப்புரிமைப் பிரச்சினையில் சிக்கி இருக்கிறது.
1986 தேசிய தின அணிவகுப்பில் இடம்பெற்ற அந்தப் பாடலை நகல் எடுத்துவிட்டதாக இந்திய இசையமைப்பாளர் ஜோசஃப் மெண்டோசா என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் அந்தப் பாடல், 'வி கேன் அச்சீவ்' என்ற பெயரில் 1983ல் எழுதப்பட்ட தன்னுடைய பாடல் என்று அவர் கூறுகிறார்.
கவுண்ட் ஆன் மி சிங்கப்பூர் என்ற பாடலை ஒரு சில நாட்களுக்கு முன்புதான் தனக்குத் தெரியும் என்றும் அவர் கூறுகிறார்.
இந்த இரண்டு பாடல்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருக்கின்றன. பாடல்களில் சிங்கப்பூருக்குப் பதிலாக 'இந்தியா' அல்லது 'மதர் இந்தியா' என்ற வார்த்தை மட்டும் மாறி இருக்கிறது.
இதனிடையே, இது பற்றி கருத்து தெரிவித்த கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சு கவுண்ட் ஆன் மி சிங்கப்பூர் பாடலின் பதிப்புரிமை தன்னிடம் இருப்பதால் இந்திய இசையமைப்பாளர் கோரிக்கை குழப்பத்தை ஏற்படுத்துவதாகக் கூறியது.
இதன் தொடர்பில் திரு மெண்டோசாவை தொடர்புகொண்டதாகவும் அவரிடமிருந்து இன்னமும் பதில் வரவில்லை என்றும் அமைச்சு தெரிவித்தது.
இதனிடையே, அந்தப் பாடலின் மூல ஒலிப்பதிவு நாடாக்கள் இப்போது தன்னிடம் இல்லை என்றும் அவை 2005ல் மும்பையில் வெள்ளம் ஏற்பட்டபோது அடித்துச் சென்றுவிட்டதாகவும் திரு மெண்டோசா கூறுகிறார்.
மும்பையில் இருக்கும் 'பால் பவன்' என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் இசையைப் பயிற்றுவித்தபோது அந்தப் பாடலைத் தான் எழுதியதாகவும் அதை 1983ல் 250 ஆதரவற்ற பிள்ளைகள் பாடியதாகவும் அது ஒன்றுதான் தன்னிடம் இப்போது உள்ள ஒரே ஆதாரம் என்றும் அந்த 58 வயது இசையமைப்பாளர் கூறுகிறார்.
திரு மெண்டோசா, அந்தப் பாடலுக்கான உரிமையை 'பாவ்லின் இந்தியா' என்ற கிறிஸ்துவ புத்தகம் மற்றும் இசைத்தட்டு நிறுவனம் ஒன்றுக்கு விற்றுவிட்டார்.
கவுண்ட் ஆன் மி சிங்கப்பூர் பாடலின் தழுவல்தான் வி கேன் அச்சீவ் பாடல் என்பதை 'பாவ்லின் இந்தியா' நிறுவனம் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு இருக்கிறது என்பதை அமைச்சு தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் சுட்டிக்காட்டியது.
அதோடு மட்டுமின்றி, கவுண்ட் ஆன் மி சிங்கப்பூர் பாடல் 1986 முதல் சிங்கப்பூரின் தேசிய கீதமாக இருந்து வந்துள்ளது என்பதும் தனக்குத் தெரியாது என்று கூறிய பாவ்லின் இந்தியா நிறுவனம், மன்னிப்புக் கேட்டுக்கொண்டு அந்தப் பாடலை தன்னுடைய தளங்களில் இருந்து நீக்கிவிட்டது. அதை அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது.
"கவுண்ட் ஆன் மி சிங்கப்பூர் பாடல் மிகவும் பிரபலமான தேசிய பாடல்களில் ஒன்று. அதே நேரத்தில் இந்தியாவில் ஆசிரியர்களும் மாணவர்களும் பள்ளிக்கூடங்களில் அந்தப் பாடலை பாடி தேசப்பற்றை வெளிப்படுத்தும் காணொளிகள் அங்கு பிரபலமாகி உள்ளன.
"இந்தியாவில் அந்தப் பாடலுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக தெரிவது மகிழ்ச்சி அளிக்கிறது," என்று அமைச்சு கூறியது.

