'லூயிஸ் ஊட்டன்' நவநாகரிக உடை நேரடி மேடைக்காட்சி
பிரான்சின் புகழ்பெற்ற 'லூயிஸ் ஊட்டன்' நாகரிக உடை நிறுவனம் சிங்கப்பூரில் நவநாகரிக உடை மேடைக் காட்சியை நேரடியாக நடத்துகிறது. பாரிஸ், லண்டன், மிலான் ஆகிய நகர்களில் நடக்கவிருந்த நேரடி மேடைக் காட்சிகள் கொவிட்-19 காரணமாக முற்றிலும் மின்னிலக்க ரீதியில் அரங்கேறின.
ஆனால் சிங்கப்பூரில் இளவேனிற்கால/கோடை கால காட்சி 2021, கலை அறிவியல் அருங்காட்சியத்தில் நேரடியாக நடக்கவிருக்கிறது.
நண்பகல், பிற்பகல் 4 மணி, இரவு 7.30 மணி என மூன்று காட்சிகள் நடக்கும். ஒவ்வொன்றிலும் 112 விருந்தினர்கள் கலந்துகொள்வர்.
ஒரு மீட்டர் இடைவெளி, முகக்கவசம் எல்லாம் கட்டாயம். முகக்கவசம் இல்லாமல் 41 அழகிகள் மேடையில் வலம் வருவார்கள். அவர்களை 3 மீட்டருக்கு அப்பால் இருந்துதான் வருகையாளர்கள் காணலாம்.
மைக்ரோசாஃப்ட் ஊடுருவல்: சிங்கப்பூரில் பாதிப்பு ஆபத்து
உலகில் பரவலாக பயன்படுத்தப்படும் மைக்ரோசாஃப்ட் மின்னஞ்சல் மென்பொருளில் பெரிய அளவில் ஊடுருவல் இடம்பெற்றதன் விளைவாக சிங்கப்பூரில் நூற்றுக்கணக்கான கணினிச் சேமிப்புத் தளங்கள் (சர்வர்) பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக இடம்பெற்றுள்ள அந்த ஊடுருவல் காரணமாக உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான கணினித் தகவல் சேமிப்புத் தளங்கள் ஆபத்தை எதிர்நோக்குகின்றன. அந்த ஊடுருவல் டிசம்பரில் தெரிவிக்கப்பட்ட 'சோலார் விண்ட்ஸ்' என்ற ஊடுருவலைவிட மோசம் என்பது தகவல்கள் மூலம் தெரியவருகிறது.
சிங்கப்பூரில் பல நிறுவனங்களின் கட்டடங்களில் செயல்படும் ஏறத்தாழ 380 மைக்ரோசாஃப்ட் எக்ஸ்சேஞ்ச் சேமிப்புத் தளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக 'போலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ்' என்ற இணையப் பாதுகாப்பு நிறுவனம் சென்ற வாரம் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அந்நிறுவனம் இது பற்றி மேல் விவரங்களைத் தெரிவிக்கவில்லை.
இது பற்றிக் கருத்துத் தெரிவித்த சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு முகவை, சிங்கப்பூரில் அத்தகைய ஆபத்து தொடர்பிலான பாதிப்பு பற்றி தனக்குப் புகார் எதுவும் வரவில்லை என்று தெரிவித்தது.
ஆயுதப் படைப் பயிற்சிகள்
சிங்கப்பூர் ஆயுதப் படைகள், சிலேத்தார், மார்சிலிங், ஜாலான் பகார், நியோ டியோ, லிம் சூ காங், ஜாலான் குவோக் மின், துவாஸ், அப்பர் ஜூரோங், ஹோங் கா, அமா கெங், பாசிர் ரிஸ், பிடோக் படகுத் துறை, கிராஞ்சி, லெண்டோர், சிம்பாங், செம்பவாங், மண்டாய் ஆகிய இடங்களில் மார்ச் 22 முதல் மார்ச் 29 வரை ராணுவப் பயிற்சிகளை நடத்தும். வெற்றுவேட்டுகளும் வாண வெடிகளும் பயன்படுத்தப்படும்.
உண்மையான குண்டுகளைப் பயன்படுத்திப் பயிற்சி மேற்கொள்ளப்படும் பாசிர் லாபாவில் மார்ச் 22 முதல் மார்ச் 29 வரை உண்மையான குண்டுகளைப் பயன்படுத்தும் பயிற்சிகளை ஆயுதப்படைகள் நடத்தும்.
அச்சமடைய வேண்டாம் என்றும் பயிற்சிப் பகுதிகளை விட்டு விலகி இருக்கும் படியும் பொதுமக்களுக்கு சிங்கப்பூர் ஆயுதப் படைகள் ஆலோசனை கூறி உள்ளன.

