முழுநேர தேசிய சேவையாளரான 22 வயது லியூ காய் மரண மடைந்தது தொடர்பான விசாரணை நேற்று தொடங்கியது.
இந்த வழக்கில் சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்த கேப்டன் ஓங் லின் ஜி பாதுகாப்பாகச் செயல்படாததால் அவருக்கு மரணம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால் தம் மீதான குற்றச்சாட்டை ஓங் லின் ஜி மறுத்துள்ளார்.
2018 நவம்பரில் நடந்த பயிற்சியின்போது 22 வயது லியூ 'லேண்ட் ரோவர்' வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தார். அப்போது லியூவின் பாதுகாப்புக்கு பொறுப்பு வகிக்கும் அதிகாரியாக ஓங் லின் ஜி செயல்பட்டார். முன்புறத்தில் இருந்த பயோனிக்ஸ் கவச வாகனத்துக்கும் லியூ ஓட்டிச் சென்ற வாகனத்துக்கும் இடையே 30 மீட்டர் பாதுகாப்பு இடைவெளி இருப்பதை ஓங் லின் ஜி உறுதி செய்ய வேண்டும்
ஆனால் அதையும் மீறி லியூவை கவச வாகனத்தைக் கடந்து செல்லுமாறு ஓங் லின் ஜி உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. இதை ஏற்று லியூ செயல்பட்டபோது கவச வாகனம் மோதி லியூ மரண மடைந்தார்.
ஓங்கை பிரதிநிதிக்கும் வழக்கறி ஞரான டியோ சூ கீ, சம்பவத்தன்று கவச வாகனமோட்டியவருடன் தமது கட்சிக்காரர் தொடர்புகொள்ள வேண்டிய விதிமுறை எதுவும் இல்லை என்று வாதிட்டுள்ளார். விசாரணை தொடர்கிறது.

