சிங்கப்பூரில் இன்று நண்பகல் நிலவரப்படி புதிதாக 15 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அவர்கள் அனைவருமே வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்தவர்கள். தனிமையில் இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சமூகத்திலும் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளிலும் இன்று புதிதாக யாருக்கும் தொற்று இல்லை. நேற்று புதிதாக 15 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டதாகவும் அவர்களில் 66 வயது இந்தோனீசிய மாது ஒருவர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்து இருந்தது.
நேற்று புதிதாகக் கிருமி தொற்றிய அனைவரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். அவர்களுக்கும் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தொடக்கத்தில் அவர்களிடம் தொற்றுக்கான அறிகுறி தெரியவில்லை. தனிமை உத்தரவை நிறைவேற்றியபோது எடுக்கப்பட்ட பரிசோதனை மூலம் அவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியானது. அன்றும் சமூகத்தில், வெளிநாட்டு ஊழியர் விடுதியில் புதிதாக யாருக்கும் தொற்று இல்லை.
இதனிடையே, சமூகத்தில் புதிதாக கிருமி தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த வாரம் ஒன்றாகக் குறைந்தது என்றும் அமைச்சு தெரிவித்தது.
நேற்று 13 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அவர்களையும் சேர்த்து 59,999 பேர் முழுமையாக குணமடைந்து இருக்கிறார்கள். கொவிட்-19 தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 60,167 ஆக இருக்கிறது.
இன்னமும் மருத்துவமனையில் 41 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சமூக நல்வாழ்வு நிலையங்களில் 94 பேர் குணமடைந்து வருகிறார்கள்.
சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று காரணமாக 30 பேர் பலியாகிவிட்டனர். கொவிட்-19 இருந்தும் இதர காரணங்களால் 15 பேர் மாண்டுவிட்டனர்.

