கொவிட்-19 காரணமாக வழக்கத்துக்கு மாறாக வீட்டிலேயே அடைபட்டு இருப்பதால் பலருக்கு உடல் எடை கூடி இருக்கும்.
ஆனால் தெம்பனிஸ் பலதுறை மருந்தகத்தில் பணியாற்றும் நாடியா எர்னியாந்தி மாலிக்கி என்ற 35 வயது மூத்த தாதியைப் பொறுத்தவரை நிலைமை நேர் மாறானது. 16 ஆண்டுகளாக தாதியாக அவர் வேலை பார்க்கிறார்.
ஆனாலும் உடல் நலனில், சாப்பாட்டில் அவர் அவ்வளவாக கவனம் செலுத்தியதில்லை. உடற்பயிற்சியும் அவ்வளவாக செய்வதில்லை. சாப்பாட்டு பிரியரான அவர், எதைப்பற்றியும் கவலைப்படாமல் அன்றாடம் குறைந்தது ஒரு முறையாவது இனிப்பு சாப்பிட்டுவிடுவார்.
இப்படி இருந்து வந்ததால் 1.65 மீட்டர் உயரம் உள்ள அவரின் உடல் எடை 90 கிலோவாகிவிட்டது.
அவரால் பலதுறை மருந்தகத்தில் சுறுசுறுப்பாக வேலை பார்க்கவும் முடியவில்லை.
சுகதாதாரப் பராமரிப்பு ஊழியர் உடல் நலனில் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும் என்பதை உணர்ந்துகொண்டு இருந்தார் என்றாலும் அதற்கு அவர் முன்னுரிமை கொடுக்கவில்லை.
சிங்கப்பூரில் 2020ல் பொருளியல் முடக்கம் அறிவிக்கப்பட்டதை அடுத்து எல்லாம் மாறியது. சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு வேலைச் சுமை கூடியது.
வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் செயல்பட்ட மருத்துவக்கூட உதவி ஊழியராக தாதி நாடியா நியமிக்கப்பட்டார்.
கடும் வெயிலிலும் எப்போதும் உடல் முழுவதையும் மூடிய உடை. முகக்கவசம் கையுறைகளுடன் அன்றாடம் சுமார் 4 மணி நேரம் வேலை பார்க்கவேண்டிய நிலை. முடியவில்லை என்றாலும் தேவையை உணர்ந்துகொண்டு அவர் பணியாற்றினார்.
இந்த நேரத்தில்தான் அவருக்கு ஒரு சிந்தனை உதித்தது. சமூகத்துக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் உதவும் வகையில் உடல் நலனுடன் இருக்கவேண்டும் என்று அவர் முடிவெடுத்தார்.
வழக்கமாக உடற்பயிற்சி செய்ய தொடங்கினார். சிரமமாக இருந்தாலும் தொடங்கியதை நடுவே விடக்கூடாது என்று முடிவு செய்து உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்றார். யோகா, ஸும்பா பயிற்சிகளில் ஈடுபட்டார். சாப்பாட்டிலும் அதிக கவனம் செலுத்தினார்.
வீட்டுச் சாப்பாடு பக்கம் திரும்பினார். இவற்றின் பலனாக ஓரே ஆண்டில் 15 கிலோ எடை போனது.
இப்போது 75 கிலோ எடையுடன் உடல்நலனுடன் சுறுசுறுப்புடன் இருக்கிறார். காய்கறிகளை அவர் உணவில் அதிகமாக இப்போது சேர்த்துக்கொள்கிறார்.
தாதி நாடியாவின் இந்த மாற்றங்கள் அவருடைய குடும்பத்திலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தின.
அவருடைய பெற்றோரும் சகோதரியும் நலமான உணவை இப்போது விரும்புகிறார்கள்.
உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று அந்தத் தாதி தன்னுடைய சக ஊழியர்களையும் ஊக்குவித்து வருகிறார்.
வெளிநாட்டு ஊழியர் விடுதியில் பணியாற்றியதை அடுத்து தொண்டூழிய உணர்வும் அவரிடம் இப்போது தலைதூக்கி இருக்கிறது.
"உடல்நலனுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டதற்குப் பொருளியல் முடக்கம் முக்கியமான காரணம்.
"உடல்நலனுடன் ஊக்கத்துடன் சுறுசுறுப்புடன் இருந்தால் அன்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் உதவ முடியும். வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உடனே அதற்கான முயற்சிகளைத் தொடங்குங்கள்.
"முயற்சி செய்யாமல் இருப்பதைவிட முயற்சி செய்து தோல்வி ஏற்பட்டாலும் அது சிறந்ததுதான்.
"வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் உங்களுக்கு இருந்தால், நீங்கள் எந்த அளவுக்குக் களைத்துப்போய் இருந்தாலும் உங்களிடம் ஊக்கம் குறைவாக இருந்தாலும் குறிக்கோளை நிறைவேற்றும் முயற்சியைக் கைவிடாதீர்கள்.
"இறுதியில் உங்களுக்கு உடல் நலமும் மனநலமும் உண்டாகும். இது உண்மை," என்பதே தாதி நாடியா கூறும் ஆலோசனை.

