சிங்கப்பூரில் செயல்படும் மலேசிய தூதரகத்தில் அண்மைய நாட்களாகவே நெடுநேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதால் பலரும் எரிச்சல், சலிப்படைந்து உள்ளனர்.
தங்கள் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கவேண்டி இருக்கிறது.
அந்தத் தூதரகத்தில் பெரும்பாலும் காலை நேரத்தில் இதே நிலைதான் இருக்கிறது என்று மலேசியர்கள் பலரும் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நேற்று குறிப்பிட்டது.
பலரும் சமூக ஊடகத்தில் தங்கள் சலிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
தங்ளின் பகுதியில் இருக்கும் ஜெர்விஸ் ரோட்டில் அந்தத் தூதரகம் செயல்படுகிறது. மார்ச் பள்ளிக்கூட விடுமுறையும் சேர்ந்துகொண்டதால் தூதரகத்தில் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, இது பற்றிக் கேட்டபோது, சிங்கப்பூருக்கான இடைக்கால மலேசியத் தூதர் முகம்மது ராட்ஸி ஜமாலுதீன் கருத்து கூற மறுத்துவிட்டதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

