வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை நேரத்தை ஒதுக்குவதற்காகவும் அதை நிர்வகிப்பதற்காகவும் உருவாக்கப்பட்ட சுகாதார மேம்பாட்டுக் கழகத்தின் தகவல்தொழில்நுட்ப முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
'மூக்கு திரவ பரிசோதனை முன்பதிவு முறை' என்ற அந்த ஏற்பாடு, இப்போது பல்வேறு வகைப்பட்ட கொவிட்-19 பரிசோதனைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
பெரிய அளவில் பரிசோதனைகளை நடத்துவதற்கான ஆற்றலைக் கொண்ட அம்சங்கள் அந்த முறையில் ஏற்கெனவே சேர்க்கப்பட்டு இருப்பதால் இது சாத்தியமாவதாக இந்தக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸீ யோங் காங் தெரிவித்தார்.
கொவிட்-19 பரிசோதனை நடைமுறைகளுக்குத் திட்டமிட்டு அவற்றை நிர்வகிப்பதற்கான முறைகளை உருவாக்குவதில் தொண்டாற்றியதற்காக வியாழக்கிழமை இந்தக் கழகமும் சுகாதார அமைச்சு உள்ளிட்ட இதர அமைப்புகளும் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்பட்டன.

