புக்கிட் மேராவில் லுத்தரன் சமூகப் பராமரிப்பு சேவைகளின் புதிய அலுவலகம் திறப்பு

புக்கிட் மேராவில் லுத்தரன் சமூகப் பராமரிப்பு சேவைகளின் புதிய அலுவலகம் திறப்பு

2 mins read
6f34977f-8fd5-41a4-867d-9e8bb02f446a
தேசிய வளர்ச்சி அமைச்சரும் சமூக சேவைகளின் ஒருங்கிணைப்பிற்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டெஸ்மண்ட் லீ நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

லுத்தரன் சமூகப் பராமரிப்பு சேவைகள் ஜாலான் புக்கிட் மேராவில் இன்று தனது புதிய அலுவலகத்தைத் திறந்தது.

தேசிய வளர்ச்சி அமைச்சரும் சமூக சேவைகளின் ஒருங்கிணைப்பிற்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டெஸ்மண்ட் லீ நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

முன்னதாக, லுத்தரன் சமூகப் பராமரிப்பு சேவைகள் அலுவலகம் மெக்பர்சன் சாலையில் அமைந்திருந்தது.

கொவிட்1-9 பரவலை அடுத்து தனது சேவைகளை மின்னிலக்கமயமாக்கி, அச்சேவைகள் அலுவலகம் தொடர்ந்து செயலாற்றி வருகிறது.

அந்த லாப நோக்கமற்ற நிறுவனம் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தி வருகிறது என்பதை அதன் நிர்வாக இயக்குநர் ஜஸ்டின் முய் பகிர்ந்துகொண்டார்.

கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து அரசாங்க நீதிமன்றங்களின் பங்காளித்துவத்துடன் 'புரொஜெக்ட் ரிஸ்டோர்' எனும் திட்டத்தை அந்த அமைப்பு செயல்படுத்தி வருகிறது.

சமூகப் பூசல்களை நீதித்துறைச் செயல்முறையில் இருந்து திசைதிருப்பி, மாற்றுச் சீரமைப்புச் செயல்முறை மூலம் மக்கள் தங்களுக்கு இடையிலான உறவுமுறையைச் சரிசெய்துகொள்ளும்படிச் செய்வது அத்திட்டத்தின் நோக்கம்.

காணொளிக் கலந்துரையாடல் கருவிகளைப் பயன்படுத்தி அத்திட்டம் கடந்த ஆண்டில் இணையத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டது.

அத்திட்டம் அறிமுகமானதில் இருந்து, இதுவரை 24 வழக்குகளை லுத்தரன் சமூகப் பராமரிப்பு சேவைகள் கையாண்டுள்ளது.

அவற்றில் ஏழு வழக்குகள் நீதிமன்றங்களில் இருந்து மீட்டுக்கொள்ளப்பட்டன. சென்ற ஆண்டில் மட்டும் ஆறு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. அவற்றில் இரு வழக்குகள் நீதிமன்றங்களில் இருந்து திரும்பப் பெறப்பட்டன.

அத்துடன், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக்கூடிய 'மெய்நிகர் செவிமடுப்பு வட்டம்' எனும் சேவையையும் கடந்த ஆண்டு ஏப்ரலில் அவ்வமைப்பு அறிமுகப்படுத்தியது.

பயிற்சிபெற்ற பணியாளர்களால் நடத்தப்படும் அந்த சேவை மூலம், ஒரு மின்னிலக்கத் தளம் வாயிலாக குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் தாங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பகிரலாம்.

"புத்தாக்கத்திலும் மின்னிலக்கமயமாவதிலும் லுத்தரன் சமூகப் பராமரிப்பு சேவைகளின் படைப்பாற்றலும் மீள்திறனும் ஊக்கமளிப்பதாக உள்ளன. கொவிட்-19 பரவல் ஏற்படுத்திய பல சவால்களுக்கு இடையிலும் அது கருணையுடன் செயல்பட்டு வருகிறது," என்று அமைச்சர் லீ குறிப்பிட்டார்.

சமூக சேவைப் பணிகள் உட்பட பல நிலைகளிலும் கொரோனா பரவல் சிங்கப்பூருக்கு இடையூறு விளைவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

"இருப்பினும், உதவி தேவைப்படும் சிங்கப்பூரர்களைக் கைதூக்கிவிடுவதில் சமூகக் குழுக்கள், சமூக சேவைகள், அரசாங்க அமைப்புகள், பெருநிறுவனங்கள், சமூகம் ஆகியவற்றுக்கு இடையிலான பங்காளித்துவத்தின் ஆற்றலையும் அது எடுத்துக்காட்டி இருக்கிறது," என்று திரு லீ சொன்னார்.