கணினி வசதியின்றி வீட்டிலிருந்தவாறே கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு கைக்கணினியை சிங்கப்பூர் சிறுவர் சங்கம் இலவசமாகக் கொடுத்து உதவி உள்ளது.
இதற்கான செலவை ஏஜே வாரன் பல் மருந்தகம் ஏற்றுள்ளது. இந்தப் புதிய நடவடிக்கை மாணவர்கள் தங்களது பாடத்தை விரைந்து முடிக்க உதவி புரியும்.
அவர்களுக்காக சிறுவர் சங்கத்தின் ஈசூன் குடும்பச் சேவை நிலையத்தில் நேற்று 37 கைக்கணினிகள் வழங்கப்பட்டன. வீட்டில் கணினி வசதி இல்லாத டார்விஷ்யா என்னும் 13 வயது மாணவியும் அதனைப் பெற்றவர்களில் ஒருவர். கணினி இல்லாததால் ஒவ்வொரு நாளும் வீட்டுப்பாடங்களை தமது கைபேசியிலேயே செய்ய வேண்டிய நிலையில் அவர் இருந்தார். கைபேசித் திரை சிறியதாக இருப்பதால் பாடத்தை அதில் செய்வதில் அவருக்குச் சிரமம் இருந்தது.
அதனைத் தவிர்க்க பள்ளிக்கூடத்திற்குச் சென்று கணினியைப் பயன்படுத்தி வந்தார் அந்த மாணவி. இனி அவருக்கு அந்தச் சிரமம் இருக்காது. 11.6 அங்குல திரையுடன் கூடிய கைக்கணினி அவருக்குக் கைகொடுக்கும்.
12 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்களுக்கும் வேலை செய்யும் இளையர்களுக்கும் நேற்றைய நிகழ்வில் கைக்கணினி வழங்கப்பட்டது.
ஏஜே வாரன் பல் மருந்தக நிறுவனர் டாக்டர் ஏன்டி வாரன் பெரிய அளவில் மேற்கொண்டிருக்கும் முதல் அறப்பணி நன்கொடை இது.
கைக்கணினி தேவை உள்ளோரை அடையாளம் காண சிங்கப்பூர் சிறுவர் சங்கம் உதவியதாக அதன் ஈசூன் குடும்பச் சேவை நிலையத்தின் உதவி இயக்குநர் ஃபாங் சின்வெய் கூறினார். வீட்டில் போதுமான தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள் இல்லாத பிள்ளைகளை அடையாளம் கண்டு கொடையாளருக்கு சங்கம் பரிந்துரை செய்ததாக அவர் தெரிவித்தார்.
"இந்த மின்னிலக்க யுகத்தில் மடிக்கணினி, கணினி போன்றவற்றைப் பெற்றிராத, வசதி குறைந்த குடும்பங்களுக்கு அதுபோன்ற சாதனங்களை வழங்குவதன் மூலம் சமூக-பொருளியல் ஏற்றத்தாழ்வைப் போக்குவதே எங்களது நோக்கம்," என்று டாக்டர் வாரன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் தெரிவித்தார்.
"இன்றைக்கு இந்த உதவியைப் பெற்றிருக்கும் 12 வயது முதல் 24 வயது வரையிலான இளையர்கள் நமது நாட்டின் எதிர்காலம்," என்றார் அவர்.
வரும் ஏப்ரல் 1ஆம் தேதி 'ஃபெய்த் ஏக்ட்ஸ் ஆர்கனைசேஷன்' என்னும் நிறுவனத்திற்கு 10 கைக்கணினிகளையும் ஆண்டின் பிற்பாதியில் மேலும் 18 கைக்கணினிகளையும் தானமாக வழங்க டாக்டர் வாரன் பல் மருந்தகம் திட்டமிட்டுள்ளது.

