மின்னிலக்கப் படத்தொகுப்பு ஒன்றுக்கு சாதனை அளவாக $69 மில்லியன் (S$93 மில்லியன்) மதிப்புள்ள மின்னிலக்க நாணயத்தைச் செலவிட்ட சிங்கப்பூர் முதலீட்டாளரைப் பற்றிய விவரம் வெளிவந்துள்ளது.
கடந்த வாரம் உலகின் கலா ரசிர்களின் கவனத்தை ஈர்த்தது மின்னிலக்கப் படத்தொகுப்பு ஒன்று.
'பீபல்' என்று அழைக்கப்படும் மைக் வின்ங்கில்மேன் என்னும் அமெரிக்கக் கலைஞரின் 'எவ்ரிடேய்ஸ்' என்னும் படைப்பை மார்ச் 11ஆம் தேதி நடைபெற்ற கிறிஸ்டீ'ஸ் ஏலத்தில் $69.3 மில்லியன் (S$93 மில்லியன்) மின்னிலக்க நாணயத்தைப் பயன்
படுத்தி வாங்கியவர் யார் என்ற மர்மம் ஒரு வார காலமாக நீடித்தது. 'மெட்டாகோவன்' என்ற பெயர் அடிபட்டு வந்தது.
தற்போது அந்தப் பெயருக்குச் சொந்தக்காரர் விக்னேஷ் சுந்தரேசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரே தமது அடையாளத்தை நேற்று முன்தினம் உலகுக்கு வெளிப்படுத்தினார். அவரும் டூபாடோர் என்று அழைக்கப்படும் ஆனந்த் வெங்கடேஷ்வரன் என்னும் அவரது கூட்டாளியும் மெட்டாபர்ஸ் மின்னிலக்க நிதித் தளத்தில் தங்களது விவரங்களை வெளியிட்டனர்.
தாங்கள் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் கூறினர்.
கலைப்படைப்பை ரசிப்பதிலும் மின்னிலக்க நாணயத்தைப் பயன்படுத்துவதிலும் இந்தியர் களின் ஆர்வத்தை வெளிப்படுத்தவே தங்களது அடையாளத்தைத் தாங்களாக முன்வந்து வெளியிட்டதாக அவர்கள் கூறினர்.
மெட்டாபர்ஸ் மின்னிலக்க நாணய (என்எஃப்டி) நிறுவனத்தை இருவரும் நடத்தி வருவதாகவும் இந்நிறுவனம் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டது என்றும் இணையத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.