வடக்கு-தெற்கு எம்ஆர்டி தடத்தில் மரினா சௌத் பியர் நோக்கிச் செல்லக்கூடிய ரயில் பயணிகள் நேற்றுக் காலை உச்சநேரத்தில் தாமதத்தைச் சந்தித்தனர்.
நடைமேடைக் கதவு ஒன்றில் ஏற்பட்ட கோளாற்றால் ரயில்கள் மெதுவாகச் சென்றன.
அங் மோ கியோவுக்கும் பிரேடலுக்கும் இடைப்பட்ட பயணத்தில் பத்து நிமிட தாமதம் இருப்பதாக காலை 8.28 மணிக்கு எஸ்எம்ஆர்டி நிறுவனம் தனது டுவிட்டர் செய்தியில் கூறியது.
அதற்கு முன்னர் 8.20 மணியளவில் ரயில் நிலையத்தில் பயண தாமதம் குறித்து அறிவிப்புகள் செய்யப்பட்டுக்கொண்டு இருந்ததாக அர்ஜுன் நாயர் என்னும் பயணி 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தியாளரிடம் தெரிவித்தார்.
பீஷான் நிலையத்தில் கதவுக் கோளாறு ஏற்பட்டிருப்பதாக அந்த அறிவிப்பில் சொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார். இயோ சூ காங் எம்ஆர்டி நிலையத்திலிருந்து ரயில்கள் ஆமை வேகத்தில் சென்றதாக அந்த 26 வயது ஆடவர் கூறினார்.
அதனால் அங் மோ கியோ எம்ஆர்டி நிலையத்தில் இறங்கி கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் காத்திருந் ததாகவும் அப்போது பயணிகளை நிரப்பிக்கொண்டு இரு ரயில்கள் சென்றதைத் தாம் கண்டதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.
"ஏராளமானோர் காத்திருந்தனர். அவர்களில் ஒரு சிலர் வரிசையைப் புறக்கணித்து ரயிலில் ஏறினர்," என்றார் அவர்.
தாமதம் பத்து நிமிடங்களுக்கு மேல் இருந்ததாக மேலும் சில பயணிகள் தங்களது டுவிட்டரில் பதிவிட்டனர். வேறு சிலர் வேலைக்குச் செல்வதில் தாமதம் ஏற்பட்டுவிட்ட ஆதங்கத்தை டுவிட்டரில் குறிப்பிட்டனர்.
"அங் மோ கியோவிலிருந்து பீஷான் செல்ல 30 நிமிடங்கள் ஆனது. அதனால் நான் தாமதமாக வேலைக்குச் சென்றேன். எவ்வளவு நேரம் பயணம் தாமதமடைந்தது என்னும் உண்மைத் தகவலைப் பலரும் சொன்னால் நன்றாக இருக்கும்," என்று ஒரு பயணி 8.44 மணிக்குப் பதிவேற்றிய டுவிட்டர் தகவல் குறிப்பிட்டது.
பின்னர் 9.01 மணிக்கு பதிவேற்றப்பட்ட 'வாயாடி' என்னும் பெயரைத் தாங்கிய டுவிட்டர் தகவல், ரயில்கள் மெதுவாகச் சென்றதாகவும் ரயிலில் ஏற கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் ஆனதாகவும் கூறியது.
அதேநேரம் 9.53 மணிக்கு எஸ்எம்ஆர்டி வெளியிட்ட டுவிட்டரில், அங் மோ கியோவுக்கும் பீஷானுக்கும் இடைப்பட்ட பயண நேரத்தில் ஐந்து நிமிட தாமதம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், அங் மோ கியோவுக்கும் பிரேடலுக்கும் இடைப்பட்ட பயணம் வழக்கநிலைக்குத் திரும்பி விட்டதாக 4.03 மணிக்கு எஸ்எம்ஆர்டி தெரிவித்தது.

