செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

மலேசியத் தூதரகத்தில் நெடுநேரம்

காத்திருக்கவேண்டிய சிரமம்

சிங்கப்பூரில் செயல்படும் மலேசியத் தூதரகத்தில் அண்மைய நாட்களாகவே நெடுநேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதால் பலரும் எரிச்சலும் சலிப்பும் அடைந்து உள்ளனர்.

தங்கள் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க நூற்றுக்கணக்கான மக்கள் வரிசையில் பல மணி நேரம் காத்திருக்கவேண்டி இருக்கிறது. அந்தத் தூதரகத்தில் பெரும்பாலும் காலை நேரத்தில் இதே நிலைதான் இருக்கிறது என்று மலேசியர்கள் பலரும் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நேற்று குறிப்பிட்டது. பலரும் சமூக ஊடகத்தில் தங்கள் சலிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

தங்ளின் பகுதியில் இருக்கும் ஜெர்வோய்ஸ் ரோட்டில் அந்தத் தூதரகம் செயல்படுகிறது. மார்ச் பள்ளிக்கூட விடுமுறையும் சேர்ந்துகொண்டதால் தூதரகத்தில் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாகக் கூறப்படு கிறது. இதனிடையே, இது பற்றிக் கேட்டபோது, சிங்கப்பூருக்கான இடைக்கால மலேசியத் தூதர் முகம்மது ராட்ஸி ஜமாலுதீன் கருத்துக் கூற மறுத்துவிட்டதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் தொழில்நுட்ப முறை நீட்டிப்பு

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை நேரத்தை ஒதுக்குவதற்காகவும் அதை நிர்வகிப்பதற்காகவும் உருவாக்கப்பட்ட சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் தகவல்தொழில்நுட்ப முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

'மூக்கு திரவப் பரிசோதனை முன்பதிவு முறை' என்ற அந்த ஏற்பாடு, இப்போது பல்வேறு வகைப்பட்ட கொவிட்-19 பரிசோதனைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

பெரிய அளவில் பரிசோதனைகளை நடத்துவதற்கான ஆற்றலைக் கொண்ட அம்சங்கள் அந்த முறையில் ஏற்கெனவே சேர்க்கப்பட்டு இருப்பதால் இது சாத்தியமாவதாக இந்த வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸீ யோங் காங் தெரிவித்தார்.

கொவிட்-19 பரிசோதனை நடைமுறைகளுக்குத் திட்டமிட்டு அவற்றை நிர்வகிப்பதற்கான முறைகளை உருவாக்குவதில் தொண்டாற்றியதற்காக வியாழக்கிழமை இந்த வாரியமும் சுகாதார அமைச்சு உள்ளிட்ட இதர அமைப்புகளும் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்பட்டன.

புதிய அம்சங்களை வேகமாக அமலாக்கிய அமைப்புக்கு பாராட்டு

சிங்கப்பூரில் சுகாதாரப் பராமரிப்பு வளங்களை நிர்வகிக்க 2019 டிசம்பரில் தகவல்தொழில்நுட்ப முறை என்ற ஓர் அமைப்பு அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது.

ஒருங்கிணைந்த சுகாதார தகவல் முறை (IHiS) என்று குறிப்பிடப்படும் அந்த அமைப்பைச் சேர்ந்த ஒரு குழு, தனது தகவல்தொழில்நுட்ப முறையில் கிருமித் தொற்றை நிர்வகிக்க மேலும் பலவற்றை அடுத்த 12 மாதங்களில் உருவாக்க வேண்டும் என்று திட்டங்களை வகுத்திருந்தது.

ஆனால் சென்ற ஆண்டு ஜனவரியில் கொவிட்-19 தலைகாட்டியதை அடுத்து அந்தப் பணிகளை நான்கே மாதங்களில் குழு முடித்தது.

மருத்துவமனைகளைச் சேர்ந்த சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்கள், மருத்துவமனை படுக்கைகளுக்கான தேவைகளையும் இதர சுகாதாரப் பராமரிப்பு வளங்களுக் கான தேவைகளையும் முன்னதாகவே கணித்து செயல்பட அந்தக் குழு உருவாக்கிய புதிய அம்சங்கள் உதவின.

'நெருக்கடிகால தொழில்நுட்ப கதாநாயகர்கள்' என்ற கருப்பொருளுடன் சிங்கப்பூர் கணினிச் சங்கம் இந்த ஆண்டில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இதற்காக அந்த அமைப்புக்கு வியாழக்கிழமை விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. கொவிட்-19 கிருமித்தொற்று காலத்தில் தொழில்நுட்பங்களின் மூலமாக சமூகத்தில் ஆக்ககரமான விளைவுகளை ஏற்படுத்திய மக்களுக்குப் பாராட்டு தெரிவிப்பதற்காக விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.