மற்றவர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடி, அதைக்கொண்டு தெமாசெக் அறநிறுவனம் வழங்கும் இலவச முகக்கவசங்களைக் கூடுதலாகப் பெற முயன்றது தொடர்பில் 39 வயது ஆடவர் ஒருவரை போலிஸ் விசாரித்து வருகிறது.
புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள முகக்கவச விநியோக இயந்திரங்களில் பலமுறை முயன்றும் இலவச முகக்கவசத்தைப் பெற முடியவில்லை என இம்மாதம் 5ஆம் தேதி போலிசில் ஒருவர் புகார் செய்தார்.
இதையடுத்து, தெமாசெக் அறநிறுவனத்தை போலிஸ் தொடர்பு கொண்டபோது, அவரது பெயரில் ஏற்கெனவே முகக்கவசம் பெறப்பட்டுவிட்டது தெரியந்தது.
அதைத்தொடர்ந்து, முகக்கவச இயந்திரங்களில் பதிவானவை உட்பட பல்வேறு படக்கருவிகளில் பதிவான படங்கள் மூலமாகவும் தங்களது விசாரணையின் அடிப்படையில் சந்தேகப் பேர்வழியை போலிசார் கைது செய்தனர்.
மற்றவர்களின் அடையாள அட்டை எண்களைப் பயன்படுத்தி சுவா சூ காங்கில் உள்ள ஒரு முகக்கவச இயந்திரத்திலும் அவர் முகக்கவசங்களைச் சேகரித்ததாகச் சொல்லப்படுகிறது. இதுபோன்ற மற்ற சம்பவங்களிலும் அவருக்குத் தொடர்பிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
மற்றவர்களின் தனிப்பட்ட தகவல்களைச் சட்டவிரோதமாகப் பெற்று, அதன்மூலம் 11 இலவச முகக்கவசங்களைப் பெற்றதற்காக 38 வயது ஆடவர் ஒருவர் இம்மாதம் 14ஆம் தேதி கைதானார். அவர் 61 முறை அப்படிச் செய்ததாக நம்பப்படுகிறது.

