பிரத்தியேக இடங்களில் இல்லத் தனிமை உத்தரவை நிறைவேற்றுவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தாக்கல் செய்த விண்ணப்பத்தில் பொய்யான உறுதிமொழிகளை அளித்ததாக 58 வயது சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் மீது நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சாட்டப்பட்டது.
விஜயகுமார் இஸட் ஜோசஃப் எனும் அந்த ஆடவர் கடந்த ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி சாங்கி விமான நிலையத்தில் வந்திறந்தியபோது உறுதிமொழிப் படிவத்தை அளித்தார். அதில், சிங்கப்பூரை வந்தடையுமுன் தொடர்ந்து 14 நாள்களுக்கு பட்டியலில் இல்லாத நாடுகளில் எதற்கும் செல்லவில்லை என அதில் அவர் குறிப்பிட்டதாக குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்தது.
ஆனால், அவர் ஜகார்த்தாவில் இருந்து சிங்கப்பூர் திரும்பியது பின்னர் தெரியவந்தது.
கடந்த நவம்பர் 2ஆம் தேதியில் இருந்து, குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தாங்கள் தங்கியிருக்கும் இடத்திலேயே இல்லத் தனிமை உத்தரவை நிறைவேற்ற அனுமதி அளிக்கக் கோரி விண்ணப்பிக்கலாம். அந்தப் பட்டியலில் இந்தோனீசியா இல்லை.
அந்நாடுகள் குறித்த அண்மைய பட்டியலை ஆணையத்தின் இணையத்தளத்தில் காணலாம்.
"தனது வசிப்பிடத்தில் தான் மட்டுமே இருப்பேன் அல்லது ஒரே காலத்தில் தன்னுடன் பயணம் செய்து, இல்லத் தனிமை உத்தரவை நிறைவேற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தங்கியிருப்பேன் என்று விஜயகுமார் அந்தப் படிவத்தில் குறிப்பிட்டிருந்தார்," என்று ஆணையம் விளக்கியது.
பின்னர் நவம்பர் 22ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 6ஆம் தேதி வரை தனது வசிப்பிடத்திலேயே அவர் இல்லத் தனிமை உத்தரவை நிறைவேற்றினார்.
இந்நிலையில், நவம்பர் 25ஆம் தேதி மேற்கொண்ட சோதனையின்போது, இல்லத் தனிமை உத்தரவு பெற்றிராத வேறு இருவருடன் விஜயகுமார் தங்கியிருந்ததை அமலாக்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
தெரிந்தே பொய்யான அல்லது தவறான தகவல்களை அளிப்போருக்கு தொற்றுநோய்கள் சட்டத்தின்கீழ் $10,000 வரை அபராதமும் அதிகபட்சம் ஆறு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதியில் இருந்து, தங்களது வசிப்பிடங்களில் இல்லத் தனிமை ஆணையை நிறைவேற்றுவோர், அந்தக் காலகட்டம் முழுவதும் மின்னணுக் கண்காணிப்புச் சாதனத்தைக் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
இல்லத் தனிமை உத்தரவிற்கு இணங்கத் தவறுவோர் குறித்து பொதுமக்கள் https://form.gov.sg/#!/5e7d9f9128201a0011cc3b6b எனும் இணையப்பக்கம் மூலமாக அல்லது 6812 5555 எனும் எண் வழியாகப் புகார் அளிக்கலாம்.

