கட்டாயப்படுத்தி மதுவை வாயில் ஊற்றி, இரண்டு மணி நேரமாக 13 வயதுச் சிறுமியைப் பாலியல்ரீதியாகச் சீரழித்த ஆடவருக்கு 28 ஆண்டு சிறைத்தண்டனையும் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளது.
காலாங் ரிவர்சைடு பூங்காவில் கடந்த 2017 அக்டோபர் 24ஆம் தேதி இரவு 9 மணி முதல் 11 மணி வரை இந்தச் சம்பவம் அரங்கேறியதாகக் கூறப்பட்டது.
முகம்மது ஆலிஃப் அப் ரஹீம் எனும் அந்த 35 வயது ஆடவர் தன் மீதான மூன்று குற்றச்சாட்டுகளையும் ஒத்துக்கொண்டார்.
21 வயதிலேயே குற்றம் புரியத் தொடங்கிய ஆலிஃப், திருட்டு, ஏமாற்று, வழிப்பறி, நம்பிக்கை மோசடி, பாலியல் துன்புறுத்தல் போன்றவற்றுக்காக 2007க்கும் 2014க்கும் இடைப்பட்ட காலத்தில் ஐந்து முறை சிறையில் அடைக்கப்பட்டான்.
இப்போது 16 வயதாகும் அச்சிறுமி, அந்த இரண்டு மணி நேரமும் போராடினாள்; இடைவிடாது அழுதாள்.
அவள் தப்பிக்க முயன்றபோது எல்லாம் ஆலிஃப் அவளைத் தடுத்ததுடன், அவள் போட்ட சத்தம் பிறருக்குக் கேட்காமல் இருக்க வாயையும் மூடினான். பாலியல் தாக்குதலுக்குப்பின் அவளை அவன் இரு முறை மிரட்டவும் செய்தான்.
சம்பவத்திற்குப்பின் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து தன் தோழியருக்கும் அத்தை ஒருவருக்கும் அவள் குரல்வழி குறுஞ்செய்தி அனுப்பினாள். அந்த 'மாமா' தன்னைச் சீரழித்துவிட்டதாக அழுதவாறே அச்சிறுமி கூறியது நீதிமன்றத்தில் போட்டுக்காட்டப்பட்டது.
ஆலிஃப்பின் காதலியினுடைய மகனும் அச்சிறுமியும் நண்பர்கள் எனக் கூறப்பட்டது. தன் காதலியின் வீட்டில் ஆலிஃப் அவ்வப்போது தங்கியதாகவும் அச்சிறுமி அவனை 'மாமா' என அழைத்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ நாளன்று, காற்று வாங்குவதற்காக காலாங் ரிவர்சைடு பூங்காவிற்கு அச்சிறுமி சென்றாள். அப்போது அங்கு ஆலிஃப்பை தற்செயலாக சந்திக்கவே, பானம் வாங்கிக்கொண்டு பூங்காவில் சென்று பேசிக்கொண்டு இருக்கலாம் என்று அவன் கூறினான்.
அங்கிருந்த படகுத்துறையின் ஓரமாக அவர்கள் இருவரும் அமர்ந்தனர். பின்னர் ஆலிஃப் தன் பையில் இருந்து 'வோட்கா'வை எடுத்தான். அச்சிறுமிக்கும் வேண்டுமா எனக் கேட்க, அவள் 'வேண்டாம்' என மறுத்துவிட்டாள்.
சில கோப்பை மது அருந்தியபின், ஆலிஃப் முன்னே சாய்ந்து அச்சிறுமியை முத்தமிட்டான். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அச்சிறுமி, அங்கிருந்து நகர முயன்றாள். ஆனால், அவளது கைபேசியைப் பிடுங்கிக்கொண்ட ஆலிஃப், பின்னர் அவள் மீது ஏறி அமர்ந்து மானபங்கம் செய்தான்.
பூங்காவின் தனிமையான பகுதியில் அவர்கள் இருந்ததால் அச்சிறுமியின் உதவிக்குரல் எவர்க்கும் கேட்கவில்லை. அச்சிறுமி கத்தவே, ஆலிஃப் வலுக்கட்டாயமாக அவளது வாயைத் திறந்து, மதுவை ஊற்றினான்.
அங்கிருந்து அச்சிறுமி தப்பி ஓட முயல, ஆலிஃப் அவளை வேலிமீது தள்ளிவிட்டு, தடுத்தான். பின்னர் அவளைத் தரைப்பகுதிக்கு இழுத்துச் சென்று சீரழித்தான்.
அவனது பாலியல் தாக்குதல் அச்சிறுமியின் மனத்தில் ஆறாத வடுவை ஏற்படுத்திவிட்டதாக அரசாங்க வழக்கறிஞர் கிரகரி கான் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.