விசா முடிந்தபின்னும் ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்த சிங்கப்பூரர் நாடுகடத்தல்
மாணவர் விசா முடிந்தபின்னும் பிரிஸ்பனில் தங்கியிருந்த சிங்கப்பூர் பெண்ணை நாடுகடத்தியிருப்பதாக ஆஸ்திரேலிய எல்லைப் படை தெரிவித்துள்ளது. அந்தப் பெண் எங்கு அனுப்பப்பட்டார் எனும் விவரம் தெரிவிக்கப்படவில்லை. அப்பெண் பாலியல் தொழிலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப் பட்டதாகவும் கூறப்பட்டது. அந்நாட்டின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில், தெரிந்தே பாலியல் தொழிலில் ஈடுபட்ட குற்றம் முதன்முறையாக உறுதிசெய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவருக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். சட்ட விரோதமாக பாலியல் சேவை வழங்கியதன் மூலம் கொவிட்-19 பொதுச் சுகாதார நெறிமுறைகளையும் பெயர் தெரிவிக்கப் படாத அப்பெண் மீறியதாகச் சொல்லப்பட்டது. கடந்த மாதம் 25ஆம் தேதி பிடிபட்ட அவர், மார்ச் 11ல் நாடுகடத்தப்பட்டார்.
மின்வணிக மோசடி: போலிஸ் எச்சரிக்கை
கெரொசல் இணையத்தளம் வாயிலாக மின்னணுச் சாதன விற்பனை தொடர்பான மின்வணிக மோசடிகள் குறித்து கவனமாக இருக்கும்படி பயனீட்டாளர்களை போலிஸ் எச்சரித்துள்ளது. அரசாங்கத்தால் உறுதிசெய்யப்பட்ட சில்லறை விற்பனை சேவைகளை வழங்குவதாக மோசடிப் பேர்வழிகள் தெரிவிக்கலாம். அதற்குச் சான்றாக, அந்த மோசடி விற்பனையாளர் போலியான போலிஸ் அறிக்கையை வழங்கக்கூடும். அத்தகைய சம்பவங்களில், அந்த மோசடிப் பேர்வழி கெரொசல் இணைய வணிகத்தளம் மூலமாக இல்லாமல், வேறு வகையில் பணம் அனுப்பும்படி கூறலாம் என்றும் டெலிகிராம் சமூக ஊடகம் வழியாகத் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. பொருள்களை விநியோகிக்குமுன் அந்த மோசடிப் பேர்வழி தரும் வங்கிக் கணக்கு எண்ணிற்குப் பணத்தை அனுப்பம்படி பாதிக்கப் பட்டவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். சொன்னபடி பொருளும் வந்து சேராமல், விற்பனையாளரையும் தொடர்பு கொள்ள முடியாமல் போன பிறகுதான் தாங்கள் ஏமாற்றப் பட்டதை அவர்கள் உணர்ந்தனர். வர்த்தக நடவடிக்கைகளுக்கு அரசாங்க அமைப்புகள் ஒப்புதல் வழங்காது என்றும் அத்தகைய போலிஸ் அறிக்கைகள் போலியானவை என்றும் பொதுமக்களுக்கு போலிஸ் நினைவுறுத்தியுள்ளது.
உதவுவதாக நடித்து சிறுமியை மானபங்கம் செய்த ஆடவருக்குச் சிறை, பிரம்படி
வீட்டைவிட்டு வெளியேறிய 11 வயதுச் சிறுமிக்கு அடைக்கலம் அளிப்பதாகக் கூறி, பின்னர் அச்சிறுமியை மானபங்கம் செய்த ஆடவருக்கு 15 மாத சிறைத்தண்டனையும் மூன்று பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. முகம்மது ஃபித்ரி முகம்மது ஹொஸிர் பொனாவி, 26, எனும் அந்த ஆடவர், தன்மீதான மானபங்கக் குற்றச்சாட்டை ஒத்துக்கொண்டார். கடந்த ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி அதிகாலையில் அந்த மானபங்கச் சம்பவம் இடம்பெற்றது. வளர்ப்புத்தாயுடன் நல்ல உறவுமுறை இல்லாத காரணத்தால் அச்சிறுமி வீட்டைவிட்டு வெளியேறியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கொவிட்-19 விதிமீறல்: 165 பேர் சிக்கினர்
கடந்த சனிக்கிழமை முதல் புதன்கிழமை வரை பூங்காக்களிலும் கடற்கரைகளிலும் கொவிட்-19 விதிமுறைகளை மீறியதாக 165 பேர் பிடிபட்டனர். அவர்களில் சிலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது; எஞ்சியோருக்கு எழுத்துப்பூர்வ எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பூங்காக்களிலும் கடற்கரைகளிலும் பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளை மீறியதாக கடந்த ஜனவரியில் குறைந்தது 104 பேரும் பிப்ரவரியில் 74 பேரும் பிடிபட்டனர். பூங்காக்களிலும் கடற்கரைகளிலும் முகாமிடவும் இறைச்சி வாட்டவும் (பார்பக்யூ) முடியும் என்றாலும் அதற்கு முன்அனுமதி பெறவேண்டும். அதிகபட்சமாக, ஒரு முகாம் குழுவில் அறுவரும் 'பார்பக்யூ'வில் எண்மரும் இடம்பெறலாம்.

