சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்கான சுற்றுலாப் பற்றுச்சீட்டை பயன்படுத்த ஊக்குவிப்பு
சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்கான சுற்றுலாப் பற்றுச்சீட்டை முதியவர்கள் பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையில் முன்பதிவுத் தளங்களும் சுற்றுலா அமைப்புகளும் அவர்களுக்கு ஏற்ற சுற்றுலா ஏற்பாடுகளை செய்து தருகின்றன.
சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்கான சுற்றுலாப் பற்றுச்சீட்டுத் திட்டம் $320 மில்லியன் செலவில் இடம்பெறுகிறது. மார்ச் 1 நிலவரப்படி 530,000க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் தங்கள் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி $72.6 மில்லியன் தொகையைச் செலவிட்டு உள்ளனர். அவற்றைப் பயன்படுத்து வதற்கான காலக்கெடு இன்னும் நான்கு மாத காலத்துக்குள் முடிவடைகிறது.
அவற்றை ஜூன் 30க்குள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சுற்றுலா முன்பதிவுத் தளங்களுடன் சேர்ந்து முதியவர்களுக்குத் தோதான சுற்றுலாக்களுக்கு ஏற்பாடு செய்ய மக்கள் கழகம் செயல்பட்டு வருகிறது என்று தெரிவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
அத்தகைய சுற்றுலாக்களுக்கு மக்கள் கழக அடித்தளத் தலைவர்கள் ஏற்பாடு செய்து தலைமை தாங்கி வருகிறார்கள். மின்னிலக்க வசதி இல்லாதோர் போன்ற சிலருக்கு பற்றுச்சீட்டைப் பயன்படுத்த அதிக உதவி தேவைப்படுவதாகத் தெரிகிறது என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்து வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுமா என்று கேட்டதற்கு இந்தப் பற்றுச்சீட்டு தொடர்பிலான தகவல்களை அணுக்கமாகத் தொடர்ந்து தான் கண்காணிக்கப் போவதாகக் கழகம் கூறியது.
இதனிடையே, இந்தப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்திக்கொள்ளும் காலத்தை நீட்டிக்க வேண்டிய தேவை இருக்கலாம் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக வணி கத் துறையைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் லாரன்ஸ் லோ கருத்துரைத்தார்.
சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்கான சுற்றுலாப் பற்றுச்சீட்டுத் திட்டம் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. உள்ளூர் சுற்றுலாத் துறையை உசுப்பிவிடும் நோக்கத்துடன் அந்தத் திட்டம் நடப்புக்கு வந்தது. 18 வயது மற்றும் அதற்கு அதிக வயதுள்ள சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் $100 பற்றுச்சீட்டு கொடுக்கப்படுகிறது.
ஹோட்டல்கள், கவரும் இடங்கள், சுற்றுலாக்கள் ஆகியவற்றுக்கு ஐந்து முன்பதிவு இணையத் தளங்கள் வழியாக பற்றுச்சீட்டுகளை சிங்கப்பூரர்கள் பயன்படுத்திக் கொள்ளமுடியும்.
இதில் சிரமங்களை எதிர்நோக்குவோர், சமூக மன்றங்கள், கடைத்தொகுதிகள், அஞ்சல் நிலை யங்கள் ஆகியவற்றில் அமைந்துள்ள 60க்கும் மேற்பட்ட முகப்புகளை உதவிக்கு நாடலாம்.
இதனிடையே, சுற்றுலா அமைப்புகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சமூக சேவை அமைப்புகளுடன் சேர்ந்து செயல்பட்டு பல சுற்றுலாக்களுக்கு ஏற்பாடு செய்து வருகின்றன.

